சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இன்று பரோலில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிறை விதிமுறைகளை மீறி சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகவும், அவ்வப்போது சிறையிலிருந்து வெளியே சென்றுவருவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராசன், உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன.
இந்நிலையில், கணவர் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், கடந்த சில நாட்களுக்கு முன்பே, தனக்கு 15 நாட்கள் பரோல் வழங்கவேண்டும் எனக்கோரி கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா மனு அளித்தார். ஆனால், அந்த மனுவில் போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அதனை கர்நாடக சிறைத்துறை நிராகரித்தது. மேலும், கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் சிறைத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில், சசிகலா தரப்பில் அவரது கணவர் உடல்நிலை குறித்த ஆவணங்களையும் சேர்த்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் கர்நாடக சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை சரியாக இருப்பதால் அதனை கர்நாடக சிறைத்துறை ஏற்றுக்கொண்டது. சசிகலாவை அழைத்து வருவதில் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக சென்னை காவல் துறையிடம் கர்நாடக சிறைத்துறை கருத்து கேட்டிருந்தது.
சசிகலாவை பரோலில் அழைத்து வருவது தொடர்பாகவும், பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பாகவும், கர்நாடக அரசு கேட்டிருந்த 3 கேள்விகளுக்கு பதிலளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை கர்நாடகாவில் அரசு விடுமுறை என்பதால், சசிகலாவை பரோலில் விடுவிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதனால், அவர் பரோலில் இன்று விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் 11 மணியளவில் வெளியாகலாம். சென்னைக்கு வந்தவுடன் முதலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவில்லத்தில் சசிகலா அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பரோலில் வெளிவரும் சசிகலா போயஸ்கார்டன் இல்லத்தில் தங்குவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது. ஏனென்றால், அதனை நினைவில்லமாக மாற்ற அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதனால், தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் இல்லம், அல்லது பெரும்பாக்கத்தில் சசிகலாவின் வாடகை இல்லத்தில் அவர் தங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
இதனிடையே, பரோலில் வெளியாகும் சசிகலாவை அழைத்து வர டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை பெங்களூரு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.