/indian-express-tamil/media/media_files/2025/10/22/sathanur-dam-water-release-tamil-news-2025-10-22-18-49-30.jpg)
தென்பெண்ணை ஆற்றங்கரையில் வசிக்கும் விழுப்புரம், திருக்கோவிலூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலும் திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை கொண்டு அணையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி தேக்கி வைக்கப்படும் நீரின் அளவை 12 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர்.
மாலை 3.00 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 113.20 அடி அளவில் இருந்தது. வினாடிக்கு 2635 கனஅடி அளவில் நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் நடைபெற்றது. மாலை 4.00 மணியளவில் வினாடிக்கு 5000 கனஅடி வரை கூடுதல் நீர் வெளியேற்றம் செய்யப்படலாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சாத்தனூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9000 கன அடியாக அதிகரித்தது. எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் வசிக்கும் விழுப்புரம், திருக்கோவிலூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாத்தனூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 9000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.