scorecardresearch

ஸ்டாலினை இயக்கும் இந்த 3 பேர்… சவுக்கு சங்கர் நேர்காணல்

”ஆர்.எஸ்.எஸ்-க்கும் பாஜக-விற்கும் முரண்கள் வருவது இயல்புதான். இந்த முரண் மோடிக்கு எதிராக மாறுமா?  என்பதை நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக இதை எதிர்க்கட்சிகள் எப்படி தமக்கு  சாதகமாக பயன்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  மேலும் ஆர்.எஸ்.எஸ் ஒரு பழமைவாத அமைப்பு. புதிய மாற்றங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.- சவுக்கு சங்கர்

ஸ்டாலினை இயக்கும் இந்த 3 பேர்… சவுக்கு சங்கர் நேர்காணல்

”சவுக்கு ஆன்லைன்” இணையதளத்தின்  ஆசிரியர் மற்றும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக பேசினோம். நேர்காணலின்போது கிடைத்த தகவலை தொகுத்துள்ளோம்.   

அம்பேத்கர் எழுதிய  “riddles in Hinduism” என்ற புத்தகத்தின் முன் பக்கத்தை உங்கள் ட்விட்டர் கணக்கின் ‘background image’-ஆக  வைத்துள்ளீர்கள்.  சிறையில் இதை படித்ததாக ’சவுக்கு online’-ல், ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள். இந்த புத்தகம்  உங்களை ஈர்க்க காரணம்?

அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை பெரிதாக நான் படித்ததில்லை. சிலவற்றை மட்டுமே முன்பு படித்திருக்கிறேன். சிறையில் எனது நண்பர், இந்த புத்தகத்தை படிக்க அனுப்பியிருந்தார். படித்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். அம்பேத்கர் புத்தகங்களை இதுவரை நான் ஏன் படிக்கவில்லை என்ற குற்ற உணர்வு எழுந்தது. வெட்கமாக இருந்தது.  அவரின் ஆழமான மற்றும் விரிவான அறிவு என்னை வியக்க வைத்தது. ஒரு இடதுசாரி பின்புலத்தில் வளர்ந்த காரணத்தால் அம்பேத்கரை நான் படிக்க தவறிவிட்டேன். இந்து மதத்தின் எல்லா வேதங்களையும் அம்பேத்கர் படித்திருக்கிறார். ஆங்கிலம் மற்றும் வேதம் எழுதப்பட்ட சமஸ்கிருத மொழிகளில் படித்துவிட்டு. அதையே அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்து மதத்தின் சிக்கலை  விவாதித்திருக்கிறார். இதுதான் என்னை ஈர்த்தது.

குஜராத் தொங்கும் பாலம் விபத்திற்கு பிறகும் கூட அந்தத் தொகுதியில் பாஜக பெரும்பான்மை வாக்குகளை பெறுகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஒரு அரசின் கவனக்குறைவால் சக மனிதர்கள் மரணடைந்துள்ளார்கள் என்கிற கோபம் மக்களிடத்தில் எழாத அளவிற்கு பாஜவும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் மக்களை மூளை சலவை செய்கிறது. தந்திரமான அரசியல் யுக்தியை கையாள்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அவர்களிடத்திலிருந்து இதை கற்றுக்கொள்ள  வேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன்.

7-வது முறையாக ஒரு மாபெரும் வெற்றி எனில்  குஜராத் மக்களின் மனநிலை இப்படிதான் இருக்கிறதா? என்று பல விமர்னங்கள் எழுகிறது. ஆனால்  ஜிக்னேஷ் மேவானி வெற்றி நமக்கு வேறு ஒரு விஷயத்தை உணர்த்துகிறது. ஜிக்னேஷ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்  ” காங்கிரஸ் சரியாக என்னை  பயன்படுத்தவில்லை என்கிறார்”.அது பற்றி உங்கள் கருத்து?

இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். காங்கிரஸ் தன்னை சுய விமர்சனம் செய்து கொண்டு. மாற்றிக்கொள்ள  வேண்டும்.

மேலும் ஜிக்னேஷ் பேசும்போது  காங்கிரஸ் கட்சியிடம் நிதியில்லை மற்றும் பாஜக  ஒரு  ’corporate party’ என்கிறார்.  பெரும் முதலாளிகள் பாஜக-வைத்தான் கூடுதலாக நம்புகிறார்களா?  

தொழில் செய்பவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாஜகவிடம் அவர்கள் பணிந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அரசின் எல்லா ரைடுகளும் பாயும் என்று அவர்களுக்குத் தெரியும். இதனால் பாஜக கேட்கும் பணத்தை பெரும் நிறுவனங்கள் கொடுக்கிறது.

சமூக செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கணினியிலேயே அவருக்கு தெரியாமல்  தரவுகள் பதிவு செய்யப்பட்டு, பொய் வழக்கு உருவாக்கப்படுகிறது. இதில் என்.ஐ. ஏ மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது பற்றி உங்கள் பார்வை?  

ஸ்டான் சுவாமி விவகாரத்தில் ஹேக்கர்கள் செய்த செயலை அமெரிக்காவின் முன்னணி ‘technical lab’-கள் கண்டுபிடித்துள்ளது. மேலும் இது போன்று மக்களுக்காக இயங்குபவர்கள் மீது பொய் வழக்குகளை என். ஐ.ஏ தொடுக்கிறது.  இதன் மூலம் பாஜக என்ன சொல்கிறது என்றால் எங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் பத்திரிக்கையாளர்  கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றதுபோல் கொல்வோம்,  அல்லது கைது செய்வோம் என்பதுதான்.  

ஸ்டான் சாமி விஷயத்தில் என்.ஐ.ஏ தவறு செய்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள். ஆனால் திருச்சியில் உள்ள இலங்கை  தமிழர்களின் முகாம்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் செய்த கைது மட்டும் சரியாக இருக்குமா? தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுதல் என்று கூறி மாநில அரசை பணிய வைக்கவே இந்த முயற்சி செய்யப்படவில்லையா?

இந்த விஷயத்தில் என்.ஐ.ஏ சரியாகத்தான் நடந்துகொண்டுள்ளது. அதற்கான முழு ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைக்கடிகாரம்  பற்றிய விவாதத்தில்  நீங்கள் உதயநிதி மற்றும் சபரீசனின் கார் மற்றும் கைக் கடிகாரங்கள் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள். இப்படியிருக்கையில் பிரதமரின் விலை உயர்ந்த ஆடைகள்,  தலைப் பாகை, உத்தரபிரதேச முதல்வர் யோகி பயன்படுத்தும் விலை உயர்ந்த கார்கள் பற்றி ஏன் பேசவில்லை ?

இப்போது  அண்ணாமலை கைக்கடிகாரம்தான் விவாதிக்கப்படுகிறது. அந்த விவாதத்தை திமுக எழுப்புகிறது. அதனால்தான்  நான் திமுகவை கேள்வி கேட்கிறேன். அமெரிக்க அதிபர் ஆடை அல்லது இந்திய பிரதமர் ஆடை பற்றிய விவாதங்கள் எழும்போது அதை பற்றி பேசுவேன்.

ஆரம்ப காலத்தில் நீங்க ஜெயலலிதா, கலைஞர் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்களை  விமர்சனம் செய்துள்ளீர்கள். ஆனால் இப்போது முதல்வர் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்யாமல் உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என்று விமர்சனம் செய்கிறீர்கள். படிநிலையில் தரம் தாழ்ந்து சென்றுவிட்டீர்களா?

நீங்கள் வேண்டுமானால் அப்படி பார்க்கலாம். நான் அப்படி பார்க்கவில்லை. முதல்வர் ஒரு பொம்மைதான். அவரை இந்த மூவரும்தான் இயக்குகிறார்கள்.

ஆர் .எஸ்.எஸ் உழவர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் மோடிக்கும், பாஜக-விற்கும் எதிராக டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்துகிறார்கள். குறிப்பாக இந்த போராட்டத்தில் ஜி.எஸ்டி.  மரபணு மாற்றபட்ட பயிர்கள், ’kisan yojana’ திட்டம் பற்றி கடுமையான விமர்சனங்கள் இடம் பெறுகிறது. இதை ஏன் ஆர்.எஸ்.எஸ் செய்ய வேண்டும் ?

ஆர்.எஸ்.எஸ்-க்கும் பாஜக-விற்கும் முரண்கள் வருவது இயல்புதான். இந்த முரண் மோடிக்கு எதிராக மாறுமா?  என்பதை நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக இதை எதிர்க்கட்சிகள் எப்படி தமக்கு  சாதகமாக பயன்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  மேலும் ஆர்.எஸ்.எஸ் ஒரு பழமைவாத அமைப்பு. புதிய மாற்றங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் திமுக மீது வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் ஊழல் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. மக்கள் பிரச்சனையான மின்சார  கட்டண உயர்வு. மாணவர்களுக்கு இரண்டு வருடங்களாக வழங்கப்படாத மடிக் கணினி, சைக்கிள், இன்றும் தீர்க்கப்படாத போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைகள் பற்றி பேசுவதில்லையே ! ஏன்?  

இதை மற்ற சமூக ஆர்வலர்கள்  மற்றும் அமைப்புகள் கேள்வி கேட்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தை கேள்வி கேட்கத்தான் இங்கே நபர்கள் இல்லை. அதை நான் செய்கிறேன். மேலும் நான் என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அல்ல.   

’Frontline’ ஆசிரியர் இளங்கோவன் ராஜசேகரன் அருணா ஜெகதீஷன் அறிக்கையை வெளியே கொண்டு வருகிறார்.  இது தொடர்பாக அவரிடம் பேசியபோது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு ஒரு மோசமான சம்பவம். குறிவைத்துதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்கிறார். ஆனால் நீங்கள் முரண்படுவது ஏன்?

’Frontline’ ஆசிரியரை அப்படி வெளியிட வைத்ததே தமிழக அரசுதான். திமுகவின் அரசியல் தேவைக்காக இது செய்யப்பட்டது.  அருணா ஜெகதீஷன் அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை. அது ஒரு கட்டுக்கதை .

திருமாவுக்கு  ’behindwoods” நடத்திய நிகழ்வில் நீங்கள் உடன் இருப்பதுபோல  ஒரு புகைப்படத்தை வெளியிட்டீர்கள். ஆனால் வன்னியரசு உங்களை கடுமையாக விமர்சிக்கிறார். திருமா உங்களை சந்திக்க விரும்பவில்லையா?

வன்னியரசு பற்றி நான் பேச விரும்பவில்லை. இதை நீங்கள் திருமாவிடம் கேட்க வேண்டும். என்னிடம் அல்ல.

மற்ற தலைவர்கள் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதை புகழும்போது அதை கேலியாக ட்விட்டரில் பதிவிடுகிறீர்கள். ஆனால் திருமா பேசியபோது “ நீங்களுமா திருமா. காலம் கொடியது” என்று பதிவு செய்துள்ளீர்கள். இது உங்களை புண்படுத்துகிறதா?  

நிச்சயமாக வருத்தமாக இருந்தது. இதை திருமா செய்திருக்க வேண்டாம்.

இந்த கைதே  உங்களை பாஜகவிற்கு சாதகமாக பயன்படுத்த நடத்தப்பட்டதா ?

பதிலளிக்க விரும்பவில்லை. அடுத்த கேள்விக்கு செல்லுங்கள்.

எழுவர் விடுதலையை ஒட்டுமொத்த  தமிழகமே கொண்டாடியது. ஆனால் நீங்கள் அவர்களை குற்றவாளிகள் என்று சொல்வது சரியா?

உச்சநீதிமன்றம் அவர்களை குற்றவாளிகள் என்றுதான் கூறுகிறது. இதுவே எனது நிலைப்பாடும்கூட.

மத வெறி, love jihad, சாதி படிநிலை இப்படி பாஜக-வின் கொள்கை அபாயமாக இருக்கிறது. திமுகவை எதிர்ப்பதால் பாஜக வந்துவிடாதா ? அதிமுகதான் சரியான மாற்றுக் கட்சியா ?

பாஜக வந்துவிடும் என்பதால் திமுகவை விமர்சிக்காமல் இருக்க முடியாது. அதிமுகதான் சரியான மாற்றுக் கட்சி.

கந்துவட்டி கொடுமை தொடர்பாக cartoonist பாலாவை கைது செய்யும்போது சவுக்கு சங்கரிடம்  தகவல் சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார். அவரின் கைது நடைபெற்றபோது நீங்கள்தான் அந்த செய்தியை வெளியே கொண்டுவந்தீர்கள். அப்படியானால் நீங்கள் whistleblower-ஆ?

எப்படி வேண்டுமானலும் வைத்துக்கொள்ளுங்கள். நான் எந்த வரையறைக்குள்ளும் சிக்கமாட்டேன்.

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி உங்க கருத்து ?

நிச்சயமாக இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம்.

சாதி ஆணவ கொலையை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது பாமக, ஆனால் அவர்களுடன்  திருமா இணைய வேண்டும் என்று சொல்வது சரியா?

நான் அந்த கண்ணோட்டத்தில் கூறவில்லை. அரசியல் ரீதியாக இணைப்பு சாத்தியமானால் சரியாக இருக்கும் என்றுதான் கூறினேன்.

கிருஷ்ணசாமி/ திருமா/ ஜான் பாண்டியன் இவர்கள் பற்றிய கருத்து ?

இதைபற்றி ஒரு நேர்காணலில் பேச முடியாது.

எடப்பாடி பழனிசாமி முடிந்தால் தனிக் கட்சி தொடங்கட்டும் என்று பன்னீர் செல்வம் கூறுகிறார்? இது பற்றி உங்கள் கருத்து ?

இப்படி கூறுவதன் மூலம் தன்னால் அதிமுக என்ற கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற தோல்வியை பன்னீர் செல்வமே ஒப்புக்கொண்டுள்ளார்.. இதன்மூலம் அவரது தோல்வி தெளிவாகிவிட்டது.   

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Savukku shankar interview on stalin dmk government