தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீத இடங்கள் மாநில அரசு இட ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாநில அரசுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 50 சதவீத இடங்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கிராமபுறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது சலுகை மதிப்பெண் இல்லையென இந்திய மருத்துவ கவுன்சில் விதி தெரிவித்தது.
இதனையடுத்து, முதுநிலை மருத்துவ மாணவ சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணையை கடந்த மே மாதம் வெளியிட்டது. அதில், கிராமப்புறங்களில் சேவையாற்றிய மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, வெளியிடப்பட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தகுதிப் பட்டியலில், அரசு மருத்துவர்களுக்கே அதிக இடங்கள் கிடைத்தன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், கடந்த மே மாதம் நடைபெற்ற முதுநிலை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ரத்தானது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், கல்வி தொடர்பான விவகாரங்களில் இதுபோன்ற தடை உத்தரவை பிறப்பிப்பதை உயர் நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.