Advertisment

ஆதி திராவிடர், பழங்குடியினர் பதிப்பாளர்கள் பப்பாசி மீது புகார்... மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் அறிக்கை

புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிட, பழங்குடி சமூகத்தை சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகளை வைக்க தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news, latest tamil news, Tamilnadu news, Chennai news, Tamil nadu politics news, latest news in tamil, sc st publishers, tamilnadu sc st commission

புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிட, பழங்குடி சமூகத்தை சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகளை வைக்க தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான (BAPASI) ஆண்டுதோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சிகள்தான் பதிப்புத் தொழில் செய்வோர் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான முக்கிய வாய்ப்பாக அமைகிறது.

இப்புத்தகக் கண்காட்சியில் ஆதிதிராவிடர் சமூகங்களைச் சேர்ந்த தங்களுக்கு விற்பனை அரங்குகள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் இச்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவதில்லை என்றும், எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பா. அமுதரசன் மற்றும் ஏ.பி. காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் ஆகியோர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு மனு செய்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட, புத்தகக் கண்காட்சிகளில் பப்பாசி சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே குறைந்த விலையில் விற்பனை அரங்குகள் வழங்கப்படுவதாகவும், உறுப்பினர் அல்லாத பிற பதிப்பகங்களுக்கு அரங்குகள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் பப்பாசி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து அரங்கு பெற்றாலும், அதற்கு கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும்.

தான் நடத்தும் தடாகம் பதிப்பகம் ஆண்டுதோறும் பப்பாசி தலைமையிலான புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் விற்பனை அரங்கு கொடுப்பதால் தமக்கு தொழில் நெருக்கடி ஏற்படுவதுடன் புத்தக விற்பனை பாதிக்கப்படுவதாகவும், இதனால் அச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு முடிவு செய்ததாகவும் மனுதாரர் பா. அமுதரசன் கூறியுள்ளார்.

'பப்பாசி' சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கைக்காக விண்ணப்பம் கோரியபோது தடாகம் பதிப்பகம் சார்பில் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து தேவையான தரவுகளையும் இணைத்து உரிய காலத்தில் விண்ணப்பித்ததாக கூறி உள்ளார்.

அப்போது 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு சுமார் 80 புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததாகவும், 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டுவரும் தம் பதிப்பகத்தை உறுப்பினராகச் சேர்க்கவில்லை என்றும் தமது விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய, 25.05.2022 மற்றும் 28.08.2022 ஆகிய இரு நாட்களில் பப்பாசி' தலைவருக்குக் கடிதங்கள் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பப்பாசி சங்கத்தில் தாம் நடத்தும் பதிப்பகத்தை உறுப்பினராகச் சேர்க்காதது தன்னுடைய பொருளாதார முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைவதால் அதில் உறுப்பினராகச் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தை தடாகம் பதிப்பாளர் பா. அமுதரசன் நாடியுள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்து வாய்ஸ் ஆப் புத்தா' பதிப்பகத்தை நடத்தும் ஏ.பி. காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் என்பவரும் இவ்வாணையத்துக்கு மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்தோரில் சுயமாகத் தொழில் செய்வோரின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதையும், அவர்களைத் தொழில் செய்யுமாறு ஊக்குவிக்க ஒன்றிய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதையும் ஆணையம் கவனப்படுத்துகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைப் பற்றிய நூல்களும் படைப்புகளும் ஆண்டுதோறும் வெளியாகின்றன என்றாலும், இச்சமூகங்களைச் சேர்ந்த பதிப்பாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதை ஆணையம் அறிகிறது.

ஆதிதிராவிடர்களையும் பழங்குடியினரையும் முன்னேற்றுவதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியம் என்பதால் அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் நூல்களை எழுதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்கள் நூல்களை வெளியிட நிதியுதவியுடன்கூட விருதுகளை - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் - தமிழக அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்குவதை ஆணையம் வரவேற்றுப் பாராட்டுகிறது. இவ்வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்தோர் நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களாகத் தொழில் செய்வதை ஊக்குவிப்பதும் அவசியம் என ஆணையம் வலியுறுத்துகிறது.

அரசின் நிதி உதவியுடனும் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்தும் புத்தகக் கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்திவரும் 'பப்பாசி', ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பதிப்பாளர்களைத் தம் சங்கத்தில் உறுப்பினராக்க மறுப்பதும், விற்பனை அரங்குகளை ஒதுக்கக் காலம் தாழ்த்துவதும் அல்லது புறக்கணிப்பதும், மறைமுகமாக அவர்களைப் பொருளாதார நிலையில் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடும்.

மேற்குறிப்பிட்ட, நிலையைக் கணக்கில் கொண்டு பப்பாசி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பதிப்பாளர்களை அரவணைத்து ஊக்குவித்து உறுப்பினராக்க வேண்டும் என்றும், புத்தகக் கண்காட்சிகளில் அவர்களுக்கு உரிய காலத்தில் முன்னுரிமை அளித்து விற்பனை அரங்குகள் ஒதுக்கியும் சமூகச் சீர்திருத்தத்துக்கும் சமூக நீதிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களின் முன்னேற்றத்துக்கும் வித்திடவேண்டும்.

அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெறுகின்ற புத்தகக் கண்காட்சிகளில் தடாகம்', 'வாய்ஸ் ஆப் புத்தா' பதிப்பகங்களுக்கும், பிற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் விற்பனை அரங்குகள் ஒதுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Bookfair
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment