ப்ளூ வேல் கேம் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க பெற்றோருக்கு உதவும் பள்ளிகள்

குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். இணையதளம் இல்லாமல் வேறு சில நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.

உலகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் “ப்ளூ வேல் சேலஞ்” எனப்படும் விளையாட்டின் தீங்கு குறித்தும், பாதுகாப்பான இணையதள பயன்பாடு குறித்தும் விவாதிக்க தமிழக பள்ளிகள் பெற்றோர்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.

உலக அளவில் சிறுவர்கள், இளைஞர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் “ப்ளூ வேல் சேலஞ்” எனப்படும் விளையாட்டு, ரஷ்யாவில் தோன்றியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் பலர், உளவியல்ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த விளையாட்டின் இறுதிக்கட்டம், தற்கொலைக்குக் கூட்டிச்செல்வதால், விளையாட்டில் மூழ்கிய ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா‌ மற்றும் ஐரோப்‌பிய நாடுகளில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ள இந்த “ப்ளூ வேல்” விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 16 வயது இளைஞர் மனோஜ், ப்ளூ வேல் விளையாட்டினால் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை பலி வாங்கிய ப்ளு வேல் ஆன்லைன் கேமினால் தற்போது இந்தியாவிலும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் தன்மை கொண்ட இந்த விளையாட்டிற்கு அடிமையாகி, இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் எனப் பல எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. எனவே, இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும், இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நிதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ப்ளூ வேல் விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய இணையதள நிறுவனங்களுக்கு அறிவிப்புகள் வெயியிடப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறுவர்கள், இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் “ப்ளூ வேல் சேலஞ்” எனப்படும் விளையாட்டின் தீங்கு குறித்தும், பாதுகாப்பான இணையதள பயன்பாடு குறித்தும் விவாதிக்க தமிழக பள்ளிகள் பெற்றோர்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.

“ப்ளூ வேல் சேலஞ்” விளையாட்டின் தீங்கு குறித்து ஆலோசகர்கள் மூலம் பெற்றோர்களுக்கு விளக்கமளித்து, குழந்தைகளை இணையதளத்தின் விபரீதத்தில் இருந்து பாதுகாக்க சென்னை மாநகரப் பள்ளிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அந்த வகையில், சென்னை காரப்பாக்கதில் உள்ள ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் முதல்வர், “ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் விபரீதங்கள்” குறித்து பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளியின் மாணவர் ஒருவர் “ப்ளூ வேல்” விளையாட்டை விளையாடி வருகிறார் என்று பரவிய வதந்தியின் பேரில், இந்த நடவடிக்கையை அவர் உடனடியாக எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே பள்ளியின் உளவியலாளருடன் அவர் தொடர்ந்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பெற்றோர்கள் பீதி அடைவதை நான் விரும்பவில்லை. ஆனால், என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து வைத்திருந்தால் தான் வீட்டில் குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்” என்றார்.

மேலும், பள்ளிகள், பள்ளிப் பேருந்துகள், வகுப்பறைகளில் இணையதள உபயோகம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுற்றறிக்கை ஒன்றை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இந்த ஒரு பள்ளி மட்டுமல்லாமல் நகரில் இயங்கும் பெரும்பாலான பள்ளிகள், பெற்றோர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மனநல ஆலோசகர்கள் இதுகுறித்து கூறுகையில், “குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். இணையதள பயன்பாட்டை நிறுத்த வேண்டும். இணையதளம் இல்லாமல் வேறு சில நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும் என்கின்றனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பாதுகாப்பான இணையதள பயன்பாட்டை பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளின் மறைவான இடங்களில் மாணவர்களின் இணையதள பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான இணையதள நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத்தளங்களை மட்டுமே மாணவர்கள் உபயோகிக்க அனுமதிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close