சாரணர் - சாரணியர் இயக்க பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் மணியிடம் தோல்வியை தழுவினார்.
சாரணர் - சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் மணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த பதவிக்கு ஹெச்.ராஜா போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவர் போட்டியிடக் கூடாது என்ற எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால், சாரணர் சரணியர் இயக்கத்தில் நாங்கள் ஏற்க்கனவே ஈடுபட்டிருந்தலால், அந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பிற்கு மனு தாக்கல் செய்துள்ளேன் என ராஜா விளக்கமளித்தார்.
இந்நிலையில், சாரணர்-சாரணியர் இயக்க தலைவர், துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையில் இந்த வாக்குப்பதிவு நடந்தது. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.
இதன் முடிவுகள் தற்போது வெளியாகின. அதில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் மணியிடம் தோல்வியை தழுவினார். பதிவான 285 வாக்குகளில் 234 வாக்குகள் மணிக்கும், எஞ்சியுள்ள 51 வாக்குகள் ராஜாவுக்கும் விழுந்தன. அதோபோல் துணைத் தலைவர்களாக மணி, பெரியண்ணன், ரங்கநாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, சாரணர், சாரணியர் இயக்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. அதனால் இந்த தேர்தலை ஏற்க முடியாது. சாரணர்-சாரணியர் இயக்கத்தில் முறையாக பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேசிய தலைமை அலுவலக உத்தரவையும் மீறி இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.