பாம்பன் கடலில் இந்திய ரயில்வே சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் வந்து இறங்கும் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் செல்கிறார்.
அதன் பின்னர், சாலை மார்க்கமாக பயணிக்கும் அவர், பாம்பன் சாலை பாலத்திற்கு சென்று அங்கு மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மேடையில் நின்றவாறு கொடியசைத்து ராமேஸ்வரம் - தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதன் பின்னர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக மதுரை செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூர் இந்திய விமானப்படை நிலையத்திலிருந்து MI 17 என்ற இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள், மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்திறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன.
இந்நிகழ்வின் போது, இந்திய விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர். இதையடுத்து இரண்டு ஹெலிகாப்டர்களும் உச்சிப்புளி ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட ஒத்திகைகள் வரவிருக்கும் நாட்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.