மீத்தேன் திட்டம் உள்ளிட்ட அபாயகரமான திட்டங்களுக்கு எதிராக நெடுங்காலமாக போராடிவரும் பேராசிரியர் ஜெயராமன், இந்திய இறையாண்மைக்கு எதிராக புத்தகம் வெளியிட்டதாக, மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது, ஜனநாயகத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் குழாயிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போரட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், சுமார் 45 நாட்கள் சிறைத்தண்டனைக்கு பின் பேராசிரியர் ஜெயராமன் சிறையில் வெளிவந்தார்.
இந்நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட ’நதிகள் இணைப்பு திட்டம் – ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டார். அதில், நதிகள் இணைப்பு சுற்றுச்சூழல் பேரழிவு என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும், நதிகள் இணைப்பு பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதாக இருக்கும் எனவும், மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பேராசிரியர் ஜெயராமன் இந்திய இறையாண்மைக்கு எதிராக புத்தகம் வெளியிட்டதாக, அவர் மீது மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையின் இந்த செயலுக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சேர்ந்த கோ.சுந்தர்ராஜன், “பேராசிரியர் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது, அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிரானது. வைகோ, சீமான் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆக, ஒரு அமைப்பு (அ) திட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசுதல், எழுதுதல் இறையாண்மைக்கு எதிரானது அல்ல.”, என்று கூறினார்.
மேலும், சமீபத்தில், ”காவேரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமும், ஹைட்ரோகார்பன் திட்டங்களும்” என்ற தலைப்பின்கீழ் ‘பூவுலகின் நண்பர்கள்’ நடத்திய நிகவில், பேராசிரியர் ஜெயராமன் கலந்துகொண்டு உரையாற்றினார். ”இந்த நிகழ்வு மிகுந்த வரவேற்பை பெற்றது. டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து பேரா.ஜெயராமன் பேசினார். அதனால், இத்தகைய நிகழ்வுகளை ஒடுக்கும் முயற்சியாகவும் இந்த வழக்கு நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது”, எனவும் சுந்தர்ராஜன் கூறினார்.
அதே அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், “பேரா.ஜெயராமன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (பி)(b)-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட மதம், இனம், மொழி, சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடிமகனாக இருப்பதற்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று எழுதினாலோ, பேசினாலோ குற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு திட்டத்துக்கு எதிராக எழுதுவதை எப்படி தேச நலனுக்கு எதிரானது என எப்படி கருத முடியும்? அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. பல்வேறு கருத்துகள் எழத்தான் செய்யும். இந்த செயல், ஜனநாயகத்துக்கு எதிரானது. செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது, மிகவும் ஆபத்தான போக்கு.”, என்று கூறினார்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, கடந்த 2015-ஆம் ஆண்டு, அந்நாவலுக்கு தடை விதிக்க முடியாது எனவும், “பிடித்தால் படியுங்கள், இல்லையென்றால் மூடிவிடுங்கள்”, என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.