‘சீமானுக்கு என்னைத் தெரியும், எனது சினிமாவைத் தெரியும். ஆனால், எனது கொள்கை பற்றித் தெரியாது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாளை (புதன்கிழமை) அரசியல் கட்சியைத் தொடங்க உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று நாம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்துள்ளார் கமல்ஹாசன்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “படிக்கும்போதே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தேன். ஒரே ஊர், ஒரே மண். எங்கள் குடும்பங்களுக்கு அய்யாவுடைய குடும்பம் தான் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளை நடத்தியது.
தமிழகத்தில் எந்த வகையிலாவது மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறேன். இந்த மண்ணின் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகிற, கலைஞராக இருக்கக்கூடிய கமல்ஹாசன், அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென 21ஆம் தேதி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறார். கமலின் பயணம் புரட்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
என்னைவிட பெரியவர் என்பதால், கமல் என்னை வந்து சந்திப்பதைவிட, நானே நேரில் வந்து சந்தித்தேன். நானும், கமலும் அரசியலில் இணைந்து செயல்படுவதைக் காலம் தான் முடிவு செய்யும்” என்றார்.
“சீமானுக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் நடிச்ச படங்கள் பற்றித் தெரியும். ஆனால், என்னுடைய கொள்கைகள் பற்றித் தெரியாது. 21ஆம் தேதி நான் செய்யும் பிரகடனங்களைப் பார்த்துவிட்டுத்தான் எனக்கு ஆதரவு தருவாரா, மாட்டாரா என்பதைச் சொல்ல முடியும். அதுதான் நியாயம்.
அதிமுகவைச் சேர்ந்த யாரையும் நான் சந்திக்கப்போவது இல்லை. இந்த ஆட்சி சரியில்லை என்பதை நான் தெளிவாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார் கமல்ஹாசன்.