இந்திய இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மணக்காட்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த 5-ம் தேதியன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இந்த பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களை பாதுகாக்க அவர்களின் கைகளில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து கடலுக்குள் அனுப்புவோம். அப்போதுதான் எதிரிகள் தாக்கினால் திருப்பி தாக்க முடியும் என சீமான் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழக முதல்வர் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுக் கூட்டத்துக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாரே சீமான் மீது சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு, 124-ஏ, 153-ஏ, 153-பி மற்றும் 505(2) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், இந்திய இறையாண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், அரசு மீது அவதூறு பேச்சு உளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், சீமான் விரைவில் கைதாகலாம் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.