சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.140 கோடி பணம் சிக்கியதோடு, ரூ.34 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது அவர் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல, சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் பணம் மற்றும் ஏரளமான தங்க நகைகள் சிக்கியது. இந்த விவகாரத்தில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரையும் சிபிஐ கைது செய்தது.
திண்டுக்கல் ரத்தினம் மற்றும் முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம் குமார் ஆகிய மூவருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வெளியே வந்த சில நாட்களில் அமலாக்கத்துறை அவர்கள் மூவரையும் கைது செய்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி அமலாக்கபிரிவில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ரத்தினம், ராமச்சந்திரன் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.