செல்லூர் ராஜூ, ஸ்லீப்பர் செல் இல்லை என டிடிவி தினகரன் கூறினார். சி.ஆர்.சரஸ்வதியின் கருத்துக்கு மாற்றாக தினகரன் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செல்லூர் ராஜூ அண்மையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சசிகலாவை புகழ்ந்தார். ‘வி.கே.சசிகலா முயற்சியால்தான் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. நானும் இதை மாற்றிப் பேசமாட்டேன். ஆனாலும் ஒரு அமைச்சராக இருப்பதால் எனது விருப்பு வெறுப்புகளை பேச முடியாது. எடப்பாடி அரசுக்கு எனது பேச்சு இடையூறாக அமைந்துவிடக்கூடாது’ என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
‘எடப்பாடி அணியில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றன’ என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறிவரும் நிலையில், செல்லூர் ராஜூவின் இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. தவிர, வி.கே.சசிகலா தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் சென்னைக்கு வந்திருக்கும் சூழலில், செல்லூர் ராஜூ இப்படி பேசியதும் முக்கியத்துவம் பெறுகிறது.
செல்லூர் ராஜூ பேட்டி குறித்து கருத்து தெரிவித்த டிடிவி அணியின் செய்தி தொடர்பாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ‘அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனசாட்சிப்படி பேசியிருக்கிறார். பெங்களூருவில் இருந்து சின்னம்மா வந்திருக்கும் நிலையில், அவரது முகத்தை தொலைக்காட்சிகளில் பார்த்ததும், பலருக்கும் மனசாட்சி உறுத்துகிறது.
ஏற்கனவே நாங்கள் அங்கு எங்களது ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக கூறியிருந்தோம். அந்த ஸ்லீப்பர் செல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்திருக்கிறார்கள்’ என கூறினார் சி.ஆர்.சரஸ்வதி. அதேபோல டிடிவி தினகரனும், ‘ஸ்லீப்பர் செல்கள் வெளிவர ஆரம்பித்திருப்பதாக’ குறிப்பிட்டார்.
இது குறித்து இன்று திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது செல்லூர் ராஜூ, ‘சசிகலா குறித்து எனது மனசாட்சிப்படி பேசினேன். அது பெரிதாக்கப்பட்டுள்ளது. தினகரன் கூறியதுபோல நான் ஸ்லீப்பர் செல் இல்லை. எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி தொடரவேண்டும்’ என்றார் செல்லூர் ராஜூ.
இந்த சர்ச்சை குறித்து சென்னையில் இன்று டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். “நேற்றே என்னிடம் செல்லூர் ராஜூ, ஸ்லீப்பர் செல்லா? என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று சொன்னேன். அவர் ஏதோ மனசாட்சிப்படி பேசியிருப்பதாக கூறினேன். அதுதான் என் கருத்து!
ஸ்லீப்பர் செல்களை வெளிப்படையாக கூற முடியாது. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அவர்கள் வெளியே வருவார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பை எடப்பாடி பழனிசாமி அதிக நாட்கள் தள்ளிப்போட முடியாது. வேண்டுமென்றால் அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடர் வரை தள்ளிப் போடலாம்.
எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை தவறானது என்றுதான் உச்சநீதிமன்றம் சென்றாலும் தீர்ப்பு வரும். அதன்பிறகு சபாநாயகர் மீது நடவடிக்கை கோருவோம்’ என்றார் டிடிவி தினகரன்.