Advertisment

சங்கடப்படுகிறார்கள் என்றால் நாம் என்ன பண்ண முடியும் - செல்வப்பெருந்தகை நேர்காணல்

ஒரு காங்கிரஸ் நிர்வாகி நேற்றைய உங்களுடைய பேச்சு காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்திவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இன்னொரு நிர்வாகியும் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த குரலைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

author-image
Balaji E
New Update
Congress

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேர்காணல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் இன்னும் எவ்வளவு காலம் மற்ற கட்சிகளைச் சார்ந்திருப்பது என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், செல்வப்பெருந்தகையின் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. உண்மையில் செல்வப்பெருந்தகையின் திட்டம் என்ன, அவருடைய நகர்வுகள் குறித்து அறிய சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றோம்.

Advertisment

காலையிலேயே, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்துவிட்டார். முன்னெப்போதும் இல்லாத அளவில் சாதாரண நாட்களிலும் சத்திய மூர்த்தி பவனுக்கு காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் அணி அணியாக வந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து சால்வை அணிவித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். திருமண அழைப்பிதழ் அளித்து வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். சால்வை அணிவிப்பது இல்லை என்று அன்புடன் கூறுகிறார். 

இதற்கிடையில், வருகிற பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார். சில கூட்டணி கட்சி நிர்வாகிகள்கூட சந்தித்து பேசியதைப் பார்க்க முடிந்தது. அதற்குள் நேரம் கடந்து மதியம் ஆகிவிடுகிறது. சத்தியமூர்த்தி பவனிலேயே மதிய உணவை முடித்துவிட்டு,  டி.ஆர். பாலுவை சந்திக்க வேண்டும், தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று புறப்படுகிறார்.

அப்போது, ஒரு காங்கிரஸ் நிர்வாகி நேற்றைய உங்களுடைய பேச்சு காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்திவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இன்னொரு நிர்வாகியும் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த குரலைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.

புறப்படும்போது,நிர்வாகிகளிடம், இளையபெருமாள் நூற்றாண்டு விழாவுக்கு தங்கபாலு தலைமையில் குழு அமைத்திருப்பது பற்றி கூறுகிறார். ராகுல் காந்தி பிறந்தநாள் விழா பற்றி பேசுகிறார். 

car selvaperunthagai

இப்படி பிஸியாக இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அவருடைய காரில் பயணம் செய்தபடி நேர்காணல் செய்தோம்.

அதை உங்களுக்கு இங்கே அப்படியே அளிக்கிறோம்.

மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றதைக் கொண்டாடுகிற சூழலில், உங்களுடைய பேச்சு, கூட்டணிக்குள் உரசல், சலசலப்பு என்பதாக மாறிவிட்டதே இதை எப்படி கருதுகிறீர்கள்?

செல்வப்பெருந்தகை: இதில் எந்த உரசலும் இல்லை, இதில் எதுவுமே அப்படி பேசப்படுகிற பொருளும் கிடையாது. ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய கட்சியை வலிமைப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும்தான் முயற்சி செய்யும். அந்த அடிப்படையில்தான், செயற்குழு கூட்டம் அன்றைக்கு நடந்தது. இந்த செயற்குழு கூட்டத்தில், பொதுக்குழு கூட்டத்தில் எல்லோரும் சேர்ந்து, எல்லா செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களுடைய ஆதங்கத்தையும் பிரச்னைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

நேற்றைக்கு குறிப்பாக 20 மாவட்டத் தலைவர்கள் என்னிடம் வந்து, உள்ளாட்சி அமைப்பில் கடந்த முறை தேர்தலில் நிற்கும்போது, கூட்டணியில் 2 தொகுதி 3 தொகுதி கொடுத்தார்கள். கொடுத்த தொகுதியிலும் சரியாக வெற்றி பெற முடியவில்லை. ஒத்துழைப்பு இல்லை,  எல்லாம் பணம் வைத்திருப்பவர்களால் தான் வெற்றி பெற முடிகிறது. நாங்கள் ஜனநாயகவாதியாக இருக்கிறோம். காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களாக இருக்கட்டும், எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதுதான் அவர்களுடைய கருத்து. அப்போது, நான் என்ன சொன்னேன் என்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்றேன். எல்லோரும் என்ன சொன்னார்கள் என்றால், இதை விவாதமாக்குங்கள், பெரும்பான்மையானவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைக் கட்சியின் உயர்மட்டத் தலைமைக்கு பதிவு பண்ணுங்கள் என்றார்கள். 

office selvaperunthagai

சரி, இதை விவாதமாக எடுத்துக்கொண்டு, என்னுடைய முதல் உரையிலேயே பேசினேன். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் போட்டோம். அவருடைய கடுமையான உழைப்பு, அவருடைய நேர்மை, நம்பிக்கை, மூன்றாண்டுகள் அவர்கள் ஆட்சி செய்ததற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகியவற்றைப் பாராட்டி தீர்மானம் போட்டோம். அதற்கு பிறகு, இரங்கல் தீர்மானம் எல்லாம் போட்ட பிறகு, ஒரு தலைவராக எனது முகவுரையில் பேசும்போது, நான் என்ன சொன்னேன் என்றால், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது, சித்தாந்தம் இருக்கிறது, கொள்கை இருக்கிறது, கோட்பாடு இருக்கிறது, இந்தியாவில் வலிமையான கட்சியாக இருக்கிறது.

ஒரே ஒரு செய்திதான், நாம் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். இன்றைக்கு எல்லோரும் வந்து என்னிடம் பேசினீர்கள், 25 சட்டமன்றத் தொகுதிகள், 9 பாராளுமன்ற தொகுதிகள்தான் இந்த கட்சியினுடைய இலக்கா, அதற்கு மேல் போக முடியாதா? என்றால், கட்சிக் கட்டமைப்பை மிக மிக வலிமையாகக் கொண்டு போக வேண்டும், வலிமைப்படுத்த வேண்டும். திராவிட இயக்கங்களுக்கு நிகராக இந்த கட்சி வளர வேண்டும். அப்பொழுதான் வெற்றி பெறுவோம். குறிப்பாக, தலைவர் ராஜீவ் காந்தி எடுத்த முயற்சியால், தனியாக நின்று 1989-ல் 20 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம், இது வரலாறு. அ.தி.மு.க 21 விழுக்காடுதான் வாங்கியது, இதுவும் வரலாறு. ஆனால், நாம் எவ்வளவு காலம் யாரை சார்ந்திருப்பது என்பதை நீங்கள் முடிவு  செய்ய வேண்டும். நீங்கள் முடிவு செய்வதை, நான் உயர்மட்டத் தலைமையிடம் சொல்கிறேன், இதுதான் என்னுடைய பேச்சின் சாராம்சம். உடனே அவர்கள், சங்கடப்படுகிறார்கள் என்றால் நாம் என்ன பண்ண முடியும்.

selvaperunthagai office

தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும், பலப்படுத்த வேண்டும் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைமையிடம் இருந்து வலுவாக ஒலிக்கிறதே? 

இரண்டு விஷயம், ஒன்று இதை ஊக்கப்படுத்தும் பேச்சு என்று சொல்லலாம். கட்சியை வலிமைப்படுத்துவதற்கான துவக்க உரை என்று சொல்லலாம். அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எங்கள் கட்சி வளர்ச்சிக்காகத்தான் நாங்கள் பாடுபட வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தையோ, அல்லது தோழமைக் கட்சிகளையோ நாங்கள் எங்கேயும் தொடுவது கிடையாது. 

காங்கிரஸை வலுபடுத்துவதற்கு என்னமாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் காமராஜர் கூறிய ‘கே பிளான்’ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்களே?

காங்கிரசை வலுப்படுத்த ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதற்கு நேரம் காலம் வரும்போது சொல்கிறேன். 

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலமாக நீடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதும் இந்த கூட்டணி 2016-ல் இருந்து தொடர்கிறது. அதே போல, மற்ற கட்சிகளும் சேர்ந்து 2019 முதல் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலை எல்லாம் சேர்த்தால் 5  தேர்தலை சந்தித்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்த கூட்டணி வலிமையாக இருக்கிறதா? அல்லது வேறு வாய்ப்பு இல்லாததால் தி.மு.க இந்த கூட்டணி கட்சிகளைப் பிடித்து வைத்திருக்கிறதா? இல்லை இந்த கூட்டணி கட்சிகள் தி.மு.க-வைப் பிடித்து வைத்திருக்கிறதா?  

ஒருவருடைய வாக்கு இன்னொருவருக்கு என்ற சித்தாந்தம் சரிதான். காங்கிரஸ் பேரியக்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இருக்கின்ற கூட்டணி ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தாந்த கூட்டணி. பாசிசவாதிகளை அகற்றப்படுவதற்கு ஏற்படுத்தப்பட்டக் கூட்டணி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கூட்டணியில் நாங்கள் வலிமையாக இருக்கிறோம். ஒரு பிரச்னையும் இல்லை. முதலமைச்சர் மீது நாங்கள் எல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் ஒரு ஜனநாயகவாதி, ஜனநாயகத் தலைவர், எல்லாவற்றையும் அப்படித்தான் அணுகுவார்.

எங்களுடைய செயற்குழுவில், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வரப்போகிறது, அதைப் பற்றி எல்லோரும் கேட்டார்கள். உரிய இடங்களைக் கொடுப்பார்களா, அல்லது இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது, நான் சொன்னேன், பொதுக்குழுவில், செயற்குழுவில் உங்களுடைய கருத்தை சொல்லுங்கள், நான் அதை உயர்மட்டத் தலைமையிடம் தெரியப்படுத்துகிறேன் என்று கூறினேன். அப்போது இவர்கள் வைத்த கோரிக்கையை, அதை விவாதிக்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, என்னுடைய முகப்புரையில், கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது, எவ்வளவு காலம் இப்படியே நிற்பது, கட்சியைப் பலப்படுத்தாமல் இருப்பீர்கள் என்று எல்லா தலைவர்களும்  தங்களுடைய தோழர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது போல நான் அதை செய்தேன். ஆனால், சில பேர், பத்திரிகையில் ஏதோ கூட்டணியில் பிரச்னை என்று திரித்து எழுதிவிட்டார்கள். 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதனால், பலப்படுத்துவதனால் இங்கே யார் அச்சப்படுகிறார்கள் என்று கருதுகிறீர்கள்? 

யார் அச்சப்படுவார்கள் என்றால், பாசிச கட்சிகள்தான் அச்சப்பட வேண்டும். பாசிசவாதிகள்தான் அச்சப்பட வேண்டும். அந்த வகையில், பி.ஜே.பி தான் முதன்மையான பாசிசக் கட்சி, அவர்கள்தான் அச்சப்பட வேண்டும். ஜனநாயகவாதிகள், ஜனநாயக ரீதியாக கட்சி நடத்துபவர்கள் அச்சப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. 

இந்த தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், பா.ஜ.க-வின் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

பா.ஜ.க-வுடைய வாக்கு சதவீதம் அப்படியேதான் இருக்கிறது, அவர்கள் வாக்கு சதவீதம் ஒன்றும் உயரவில்லை. பா.ஜ.க-வுடன் முதலியார் சமூகத்தின் தலைவர் ஏ.சி. சண்முகம் கூட்டணியில் இருக்கிறார். அவர் வேலூரில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். அவர்களின் வாக்குகள் வருவதற்கு வாய்ப்பு இருந்தது. அதே போன்று, பாரிவேந்தர் உடையார் மக்களின் தலைவராக இருக்கிறார். அவருடைய சமுதாய வாக்குகள் பா.ஜ.க-வுக்கு வந்திருக்கிறது. பா.ம.க-வின் வன்னியர் வாக்கு வங்கி, சரத்குமாரின் நாடார் வாக்கு வங்கி, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தின் முக்குலத்தோர் வாக்கு என அந்த வாக்குகள் கொஞ்சம் கொஞ்சம், அந்த சாதித் தலைவர்களுடைய சமுதாயத் தலைவர்களுடைய மூலம் வந்திருக்கிறது. அதனால், அந்த 12 விழுக்காடு வாக்குகள் பா.ஜ.க-வின் வாக்குகள் என்று சொல்ல முடியாது. 

பா.ஜ.க மதவாதக் கட்சி என்று எதிர்க்கட்சிகளால் விமர்சனம் வைக்கப்படுகிறது. அப்படியென்றால், நீங்கள் சொல்வதன் மூலம், இந்த மக்களவைத் தேர்தலில் மதவாதமும் சாதியவாதமும் சேர்ந்து செயல்பட்டிருக்கிறதா?  

மதவாதத்தைதான் நாம் அகற்றி இருக்கிறோம். மதவாதத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை, வாய்ப்பு இல்லை என்பதுதான் இந்த தேர்தலின் முடிவு. மதவாதம் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது. இது சமூகநீதிக்கான மண். சாதியத் தலைவர்கள் சமுதாயத் தலைவர்கள் அந்த கூட்டணியில் இருப்பதால், அவர்களுக்கென்று இருக்கும் வாக்குகள் 1 சதவீதம், அரை சதவீதம் அவர்களுக்கு சென்றிருக்கிறது. 

நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானது, இளையபெருமாளுக்கு பிறகு ஒருவர் தலைவராகியிருக்கிறார். உங்களை காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் உடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். உங்களுடைய அரசியல் நகர்வு அவருடைய பாணியில் இருக்குமா? இளையபெருமாள் வலியுறுத்திய மதுவிலக்கு பற்றி வருகிற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிரொலிக்குமா?

மது விலக்கு பற்றி தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசிவருகிறோம். மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதுதான், காந்தியக் கொள்கை, காங்கிரஸ் கொள்கை. ஆனால், மதுவைக் கட்டுப்படுத்த வேண்டும். மதுக்கடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளிக்கூடங்கள், ஆலயங்கள், பொது நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. இதற்கு மாற்று ஏற்பாடு பார்க்க வேண்டும்.  

காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் உடன் ஒப்பிடுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இளையபெருமாள் மிகவும் உயர்ந்த தலைவர், அவர் இந்த நாட்டின் உயர்ந்த தலைவர். அவருடன் ஒப்பிடுகிறார்கள் என்றால் நான் அவருடைய மாணவனாகத்தான் இருக்க முடியும். 

நீங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று பேசியதற்கே, இந்த மாதிரி சலசலப்பாக மாறிவிட்டது. அதனால், கூட்டணியில் சலசலப்பு இல்லாமல் கட்சியை வளர்ப்பது என்பது சவாலாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? 

ஒரு சவாலும் இல்லை. எங்கள் கட்சியை வலிமைப்படுத்துவது எங்களுடைய கடமை. எங்களுடையக் கட்சியைப் பலப்படுத்துவது எங்களுடைய பலம். இதில் மாற்றுக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. 

உங்களுடைய அரசியல் பயணம், ஒரு காங்கிரஸ் விமர்சன அரசியல் இயக்கங்களில் தொடங்கி இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவராக பரிணாமம் அடைந்திருக்கிறீர்கள். இதை ஒரு நீண்ட அனுபவத்தின் மூலமாக அடைந்திருப்பீர்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விளிம்புநிலை மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம், குரல் அற்றவர்களுக்காக  தொடர்ந்து போராடி வந்தோம். குரலற்றவர்களின் குரலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருந்தோம். குறிப்பாக தலித் இயக்கங்களில் பணியாற்றியிருக்கிறோம். அதனுடைய அனுபவம், அந்த புரிதல், எங்கள் தலைவர் ராகுல் காந்தி என் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை எடுத்து நடத்துவதற்கு உங்களுக்கு எல்லாவித தகுதியும் உண்டு, நீங்கள் ஏற்று நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அவர் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்திருக்கிறார்.

1967-க்கு பிறகு, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்? 

கட்சி வலிமை இழந்ததுதான் காரணம், வாக்கு வங்கியை இழந்ததுதான் காரணம். இப்போது வாக்கு வங்கியைக் கொண்டு வர வேண்டும். கட்சியை வலிமைப் பெற செய்ய வேண்டும். கட்சியின் அமைப்பு, வாக்கு வங்கி இரண்டும் கட்சிக்கு இரண்டு கண்கள். அதை வலிமைப் பெற செய்வதற்கு, தீர்மானிப்பதற்கு முயற்சி செய்யப்படும். 

2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் அதுதான் இலக்கு என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகிறார். பா.ம.க தலைவர் அன்புமணி 2026 தேர்தல்தான் எங்கள் இலக்கு, நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறுகிறார். விஜய் தொடங்கியுள்ள கட்சியும் அப்படியே கூறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இலக்கு என்ன? 

2026-ல் காங்கிரஸின் இலக்கு கட்சியை வலிமைப்படுத்துவதும், கட்சியை பலப்படுத்துவதும் வாக்கு வங்கியை அதிகரிப்பதும், பெரிய அளவில் காங்கிரஸின் வாக்கு வங்கியை மாற்றுவதும்தான் இலக்கு. அதே நேரத்தில், எங்களுடைய அகில இந்தியத் தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இயங்கும்.

வி.சி.க-வுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அந்தக் கட்சியில் இருந்தவர் என்பதால், இது மிகவும் தாமதமாக கிடைத்திருக்கிறதா? அல்லது சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறா? 

சரியான நேரத்தில்தான் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே, அவர்கள் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக இருந்திருக்க வேண்டும். ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு இடத்தில் பானை சின்னத்திலும் நின்றதால் கிடைக்கவில்லை. இந்த முறை அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது நியாயமானது. நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்திய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, கோயிலில் வழிபடுவது தொடர்பாக தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னை நடந்து வருகிறது. இதில் எல்லா கட்சிகளும் அறிக்கை விடுவதோடு நிற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவும் அப்படியே இருக்கிறது. தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் இயக்கங்களின் செயல்பாடு காணாமல் போயிருக்கிறது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் வெறுமனே தேர்தலை மையமாக வைத்து இயங்குபவைகளாக மாறிவிட்டது என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் ஏதாவது செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? 

கண்டிப்பாக,  கிராமங்கள்தோறும் வீடுதோறும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் காந்தியின் அர்ப்பணிப்பை எடுத்துச் சொல்லப்போகிறோம். குறிப்பாக, பாதயாத்திரை தொடங்க இருக்கிறோம். பாதயாத்திரையில் கால் படாத கிராமமே இருக்கக்கூடாது என்ற முறையில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பாதயாத்திரை செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். நேற்றையக் (ஜூன் 12) கூட்டத்திலும், அதற்கு மேல் பாதயாத்திரை சரியாக நடைபெறவில்லை என்றால் நாங்கள் அதை உற்று கவனிப்போம். நிறைவாக நானும் கன்னியாகுமரி - சென்னை, நாகப்பட்டினம் - நீலகிரி என 4 முனைகளில் பாதயாத்திரை நடத்துவோம். 

நேர்காணல்: எ. பாலாஜி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Selvaperunthagai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment