மக்களே ஊழல் புகாரை அனுப்புவார்கள் : கமல் ஹாசன் காட்டம்

தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்குமான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தமிழக அரசின் ஊழல் குறித்த புகாரை மக்கள் அனுப்ப கமல் வேண்டுகோள் வைத்துள்ளார்.

By: Updated: July 20, 2017, 12:19:48 AM

தமிழக அரசு ஊழலில் திளைப்பதாக கமல் பேட்டியொன்றில் சொல்ல, அமைச்சர்கள் ஒவ்வொருவராக அவர் மீது கோபத்தைக் காட்டத் தொடங்கினர். இந்நிலையில் கமலுக்க்கு அரசியல் தெரியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் முடிவெடுத்துவிட்டால் நான் முதல்வர் என்று கமல் ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று சொல்லியிருந்தார். இன்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரை தம்பி என்று விழித்துள்ளார்.

கமல் அரசியலுக்கு வந்துவிட்டு கருத்து சொல்லட்டும் என்று சொன்ன அமைச்சர்களுக்கு பதலடியாக, இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்த போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக சொல்லியிருக்கிறார்.

கமல் ஹாசன் அறிக்கையின் முழு விபரம்:

இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாக விலை போகாத தமிழக வாக்காளர்களுக்கும் கூட.

ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசியம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசியம்.

ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தி திணிப்புக்கு எதிராக குர கொடுத்தாரோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.

நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்… ஊர் அறிய கைக்கூஇ வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்… என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது.

ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம்! அமைச்சர் கட்டளை இது. ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி?

இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக் கொண்டபடி ஆதாரங்களை மக்களை இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பி வைக்கும் ஒரு வேண்டுகோளே. நீங்கள் இவ்வரசின் காலத்தில் ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கி கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும், உங்கள் கேள்விகள்.

தற்கால அமைச்சர்களை விட மாண்புமிக்கவர்கள் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கெள்விகள் நிச்சயம் வரும். அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ! பொறுத்துதான் பார்க்க வேண்டும். இத்தனை லட்சம் பேரை கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை.

நிற்க செய்தி சரியாகப் புரியாதவர்களுக்கு…

’’ஊழலே இலை நிருபி பார்ப்போம்னு அமைச்சர் கேட்டார்ல..? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க… டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க…’’

எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுத்திருபார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச்சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்கௌக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல். துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

மக்கள் மந்தைகள் அல்லர்.

மக்கள் குரல் கேட்ட்கும் மாண்பை எய்துங்கள்.

விரைவில் அது கேட்கும் தெளிவாக…’’

இவ்வாறு கமல் ஹாசன் தனது அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கூடவே ஊழல் குறித்த புகார்களை துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரியையும் இணைத்துள்ளார். அதன் விபரம் வருமாறு: www.tn.gov.in/ministerslist

கமலின் இந்த அறிக்கை ட்விட்டர் பக்கத்தில் வெளியான சில நிமிடங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Send people a scam complaint kamal haasan request

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X