Advertisment

செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவல்; நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது

author-image
WebDesk
New Update
Senthil Balaji Case

Senthil Balaji Case

இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனையிலேயே 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, அமலாக்கத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமை (ஜூன்15) மாலை நடந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் சரவணன் ஆகியோரும், அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 16) தள்ளிவைத்தார்.

அதன்படி, நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் நேற்று மாலை ஆஜராகினர். காணொலி வாயிலாக செந்தில் பாலாஜியும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். அதிகாரிகள் அந்த மருத்துவமனையிலேயே விசாரணையை தொடர வேண்டும். விசாரணை முடிந்த பிறகு, அவரை ஜூன் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும், என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.

செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் அமலாக்கத் துறைக்கு பல்வேறு நிபந்தனைகளை அமர்வு நீதிமன்றம் விதித்துள்ளது.

அதன் விவரங்கள் இங்கே..

* அமலாக்கத் துறை துணை இயக்குநர் காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியேற்றக் கூடாது.

* செந்தில் பாலாஜியின் உடல் நிலை அவரது மருத்துவ சிகிச்சையை கருத்தில் கொண்டு அந்த மருத்துவமனையின் மருத்துவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்.

* செந்தில் பாலாஜிக்கு தரப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலைக்கு எந்த தொந்தரவும் மற்றும் இடையூறுகளும் தரக்கூடாது.

* செந்தில் பாலாஜிக்கு விசாரணையின் போது தேவையான உணவு மற்றும் இருப்பிட வசதிகளை செய்து தருவதுடன் மூன்றாம் தரமான விசாரணையை மேற்கொண்டு அவருக்கு தொந்தரவு தரக்கூடாது.

* எந்த சூழ்நிலையிலும் அவரை மிரட்டவோ, கொடுமைப்படுத்தவோ கூடாது.

* மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் அவரது குடும்ப உறுப்பினர்களை அமலாக்கத் துறை விசாரணையின் போது பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

* விசாரணையின் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

* அவரை வரும் 23ம் தேதி மதியம் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த வேண்டும்.

இதனிடையே செந்தில்பாலாஜிக்கு மூன்று நாள்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கும் என்று அவரது வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவித்தனா். ஆனால் நீதிபதி, அதற்காகத் தான் மருத்துவமனையில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்திருப்பதாகவும், விசாரணையின்போது, இடையூறு இருப்பதாக கருதினால், தாராளமாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment