குட்கா ஊழலை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். ஆனாலும் கடைகளில் அவற்றின் விற்பனையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் லஞ்சமும் வரி ஏய்ப்பும் நடப்பதாக மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து 2016 ஜூலை 8-ம் தேதி சென்னையில் பிரபல குட்கா நிறுவனங்களின் குடோன்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது ஒரு குட்கா நிறுவனத்தின் பெண் கணக்காளரிடம் இருந்து, குறிப்பு நோட்டு ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட பலருக்கும் மொத்தம் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. அதாவது சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்காக இந்தத் தொகையை மேற்படி நிறுவனம் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்தவர் டி.கே.ராஜேந்திரன். அவருக்கு அண்மையில் ஓய்வுக்கு பிறகும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்க வாதியான கதிரேசன், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘ரெய்டு நடந்த மறுதினமே (2016, ஜூலை 9) லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் குறித்து அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவுக்கு, வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என கூறியிருந்தார்.

இது தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படியும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘2016 ஜூலை 9-ம் தேதியே ஐ.டி. துறையில் இருந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக மனுதாரர் வழக்கறிஞர் கூறினார். அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்ததில் அப்படி எந்த தகவல் பரிவர்த்தனையும் இல்லை’ என தலைமைச் செயலாளர் பதில் தெரிவித்தார்.

இந்தப் பதில் சர்ச்சை ஆனது. அதாவது, ஜூலை 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவண பூர்வமாக எந்தத் தகவலையும் அப்போதைய தலைமைச் செயலாளருக்கு கொடுக்கவில்லை என்பது நிஜம்தான். ஆனால் ரெய்டு நடந்த மறு மாதமான 2016 ஆகஸ்ட் 12-ம் தேதி வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் (புலனாய்வு) பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமைச் செயலகத்திற்கே சென்று அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவை சந்தித்தார். குட்காவை சட்டவிரோதமாக விற்பதற்காக தமிழக அரசியல்வாதிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் 39.91 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன் அறிக்கையை அப்போது கொடுத்தார். ஒரு அமைச்சர் மற்றும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் அதில் இடம்பெற்றன.
அதே அறிக்கையின் நகலை அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாரிடமும் நேரடியாக வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போதைய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்தது தொடர்பாக உரிய ‘அக்னாலட்ஜ்மென்ட்’டையும் வருமான வரித்துறை பெற்றுக்கொண்டது.
இதன்பிறகும் மறுநாளே தான் நேரில் கொடுத்த அறிக்கை குறித்தும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் ஒரு கடிதத்தை அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவுக்கு ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதினார். தலைமைச் செயலாளரின் அலுவலக மூத்த உதவி நிர்வாக அதிகாரியான டி.பாபு அந்தக் கடிதத்தை பெற்றுக்கொண்டு ‘அக்னாலட்ஜ்மென்ட்’ செய்திருக்கிறார்.
இதன்பிறகு அப்போதைய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனர் மஞ்சுநாதா இந்த விவகாரங்கள் பற்றி கேள்விப்பட்டு, ஐ.டி. துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதாவது, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும்படி அவர் கேட்டிருந்தார். அவருக்கு பதில் எழுதிய ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன், ‘அந்த அறிக்கை ஏற்கனவே தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது’ என கூறினார்.
ஆக, குட்கா ஊழல் தொடர்பாக இவ்வளவு ஆவணங்களும் கடிதங்களும் பறிமாறப்பட்டிருக்கின்றன. ‘ஜூலை 9-ம் தேதி எந்த ஆவணங்களும் பறிமாறவில்லை என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அபிடவிட் தாக்கல் செய்த இப்போதைய தலைமைச் செயலாளர் ஆகஸ்ட் 11-ல் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவை ஐ.டி. அதிகாரி பாலகிருஷ்ணன் சந்தித்ததையும் கூறியிருக்க வேண்டும். அடுத்த நாளே கடிதம் அனுப்பியதையும் கூறியிருக்க வேண்டும். இதையெல்லாம் கிரிஜா வைத்தியநாதன் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?’ என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் கேள்வி எழுப்பினர்.
இதன்பிறகே மேற்படி ஆவணங்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டதாக தகவல் வெளியானது, இந்தச் சூழலில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 28-ல் (இன்று) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதன்படி, குட்கா ஊழல் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை போலீஸ் அதிகாரி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இந்த ஆணையத்தை இரு வாரங்களில் தமிழக அரசு அமைக்க வேண்டும். குட்கா விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் பறிமாறப்பட்டது குறித்து இந்த விசாரணை ஆணையம் விசாரிக்கும்.
தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அதிகாரி சமர்ப்பித்த ஆவணங்கள் மாயமானது குறித்து தனியாக விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுதாரரின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதேபோல டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் தொடர்வதற்கும் எந்தத் தடையையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி, விரைவில் குட்கா ஊழல் விசாரணைக்கு தனி ஆணையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.