சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்து வந்தது.
இதனிடையே, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகைகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.
கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் சில கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகியது.
அந்த காட்சிகளில், சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும், தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஒரு அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் அவர் பேசுவதற்காக பார்வையாளர் அறையும் மற்றும் உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த அறைகள் வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறையில் ஆய்வு செய்தபோது தான் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக ரூபா தனது 2-வது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக வெளியான வீடியோ காட்சிகள் சசிகலா அறைதானா? என்பதை கர்நாடக நிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய சிறைத்துறை டிஐஜி ரூபாவை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறைக்கு அம்மாநில அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.