அரசு பஸ் ஊழியர் ஸ்டிரைக் தவிர்க்கப்படுமா? என்பது இன்று தெரியும். 38 போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று பேச்சு நடத்துகிறார்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். செப்டம்பர் 24 முதல் இதற்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த இருப்பதாகவும் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு இதற்கான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை செயலாளர் யாஸ்மின் அகமது முன்னிலையில் நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்கங்களுடன் இன்று (செப்.25) பேச்சுவார்த்தை நடத்துகிறார். சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம், தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 38 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
அரசு தரப்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டேவிதார், மாநகர் போக்குவரத்து கழக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 8 போக்குவரத்துக்கழகங்களின் இயக்குனர்கள் கலந்துகொள்கின்றனர். அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்ஏவுமான சின்னசாமி, போக்குவரத்துக்கழக தொழிற்சங்க செயலாளர் பழனி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சி.ஐ.டி.யூ சார்பில் அதன் மாநில செயலாளர் ஆறுமுக நயினார், செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பான அறிவிப்பை கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடையத்தக்க வகையில் அரசின் அறிவிப்பு இருக்கும் என அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சின்னசாமி கூறினார்.
இந்தப் போராட்டத்தில் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளனர்.