இரட்டை இலை வழக்கில் இன்றே முடிவு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. விசாரணையை இன்னும் ஓரிரு வாய்தாக்களுக்கு தள்ளி வைப்பதில் டிடிவி தரப்பு தீவிரம் காட்டுகிறது.
இரட்டை இலை சின்னம், கடந்த மார்ச் மாதம் முடக்கப்பட்டது. அப்போது சசிகலா அணிக்கு மெஜாரிட்டி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஆதரவு இருந்தது. ஆனாலும், ‘அதிமுக-வைப் பொறுத்தவரை, பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் அடிப்படைத் தொண்டர்களுக்கே இருக்கிறது. எனவே இங்கு கட்சித் தொண்டர்களுக்குத்தான் பவர் அதிகம். தொண்டர்கள் எண்ணிக்கை அடிப்படையிலேயே சின்னத்தை ஒதுக்க வேண்டும்’ என அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணி கோரிக்கை வைத்தது.
இந்திய தேர்தல் ஆணையமும், ‘தேர்தல் ஆணைய விதிமுறை அப்படி இல்லை’ என எந்த மறுப்பும் கூறவில்லை. ஓபிஎஸ் அணியினர் தமிழகம் தழுவிய ஒரு உண்ணாவிரதம் நடத்தி, அதில் பெற்ற கையெழுத்துகளை இரட்டை இலை சின்னத்திற்கான அபிடவிட்களுடன் இணைத்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர். தேர்தல் ஆணையம் அதை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டது.
இதைப் பார்த்து பயந்துபோன சசிகலா அணியினரும் பிறகு அடிப்படை உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் படலத்தை ஆரம்பித்தனர். ஓபிஎஸ் அணியினராவது, 1000 அல்லது 2000 பேரின் கையெழுத்துகளுக்கு ஒரு அபிடவிட் என்ற அளவில் தாக்கல் செய்தனர். ஆனால் இபிஎஸ் தரப்பினர் ஒவ்வொரு தனி நபருக்கும் தலா ஒரு அபிடவிட் என்ற அடிப்படையில் சுமார் 7 லட்சம் அபிடவிட்களை லாரி லாரியாக கொண்டு குவித்தனர்.
அவற்றையெல்லாம் வாங்கி வைத்துக்கொண்ட தேர்தல் ஆணையம், அண்மையில் இரு அணிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அமலில் இருந்த நிர்வாகிகள் பட்டியலை கேட்டது. தவிர, மாநில நிர்வாகிகள் மட்டுமே புதிதாக அபிடவிட் கொடுத்தால் போதும் என கூறியிருக்கிறது. இதையெல்லாம் கடந்த மார்ச்சில் இரட்டை இலையை முடக்கியபோது தேர்தல் ஆணையம் ஏன் கூறவில்லை? அப்போது ‘அடிப்படை உறுப்பினர்களுக்குத்தான் பவர்’ என கூறிய ஓபிஎஸ் தரப்பு இப்போது அதைப்பற்றி பேசாதது ஏன்?
ஆக, தேர்தல் ஆணையம் இப்போது இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை கொடுக்க முடிவு செய்து இயங்குவதாகவே டி.டி.வி.தினகரன் தரப்பு கருதுகிறது. அதிலும் வரவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்பு கைப்பற்றிவிடக்கூடாது என்பதில் டி.டி.வி.தினகரன் அணியினர் தீவிரமாக இருக்கிறார்கள்.
அதனால்தான் இரட்டை இலை வழக்கில் அடுத்தடுத்து வாய்தா கேட்டு தாமதம் செய்யும் முயற்சியில் டிடிவி தரப்பு இறங்கியிருக்கிறது. டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணையில், டிடிவி அணி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக இருக்கிறார்கள். ஏற்கனவே 7 லட்சம் அபிடவிட்கள் தாக்கல் செய்திருப்பது, இபிஎஸ்-ஓபிஎஸ் அணி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்பதற்கான வாதங்களை டிடிவி அணியினர் பிரதானமாக முன்வைக்க இருக்கிறார்கள்.
டி.டி.வி.தினகரன் அணி தரப்பு வாதமே இன்னும் ஒரு நாள் தொடர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அதன்பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு அதற்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும். இறுதி விவாதத்திற்கு மேலும் ஒருநாள் தேவைப்படலாம்.
நவம்பர் 10-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் வழக்கில் முடிவை அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் மேலும் இரு நாட்கள் விசாரணை நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது. இதே காலகட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பும் வந்துவிடும் என தெரிகிறது. ஒருவேளை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டால், அதை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் முறையிடவும் டிடிவி தரப்பு தயாராக இருக்கிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் தொடங்கும் விசாரணை, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதில் கூடுதல் தெளிவுகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையே தங்கள் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரை முடிவு செய்ய அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால் விசாரணையை இன்னொரு நாளைக்கு தள்ளி வைக்கும்படியும் இன்று டிடிவி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பதும் இன்று பிற்பகலில் தெரியும்.