‘எம்.எல்.ஏ.க்களை மாரத்தான் ஓடச் சொல்வாரா ஸ்டாலின்?’

இத்தனை கடுப்புகளுக்கு மத்தியிலும், கட்சியினரை வேலை செய்ய வைப்பது தமிழக அரசியலில் இப்போது ஸ்டாலினால் மட்டுமே சாத்தியம்!

அரசியலில் அக்கிரமங்களை செய்தால் மட்டுமல்ல; நல்லதை செய்தாலும் விமர்சனம் வரத்தான் செய்யும். அதற்கு உதாரணம், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக இன்னமும் போர்க்குணத்துடன் ஸ்டாலின் செயல்படவேண்டும்; இதற்குள் 10 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியாவது எடப்பாடி பழனிச்சாமி அரசை கலைத்திருக்க வேண்டும்; கருணாநிதியைப் போல சர்வகட்சிகளை திரட்டி பெரும் அதிர்வுகளை ஸ்டாலினால் உருவாக்க முடியவில்லை; இதெல்லாம் அரசியல் ரீதியாக ஸ்டாலின் மீதான அண்மைகால விமர்சனங்கள்!

இவை ஒருபக்கம் இருக்கட்டும்! இவ்வளவு பதற்றமான அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு பயனுள்ள சில வேலைகளை கட்சித் தொண்டர்களை வைத்தே ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

தமிழகம் முழுக்க மக்களின் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றி வருவதில் குளங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவற்றில் பல குளங்கள் மன்னர்கள் காலத்திற்கு பிறகு தூர் வாரப்பட்டதே இல்லை. இந்தக் கோடையில் அந்தக் குளங்களை தி.மு.க. தொண்டர்கள் மூலமாக ஸ்டாலின் தூர்வார எடுத்த முடிவு, அரசியலை கடந்து சிலாகிக்கப்படுகிறது.

அமைப்புரீதியாக தி.மு.க.வின் 65 மாவட்டங்களிலும் இந்தப் பணியை செய்ய ஸ்டாலின் உத்தரவிட்டார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வும் இதற்காக சில பல லட்சங்களை செலவு செய்திருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து குளங்களும் விமோசனம் பெற்றுவிட்டனவா? என்றால் இல்லை.

ஆனால் குளங்களை துர் வாருவது தொடர்பாக மக்கள் மத்தியிலேயே அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் மக்களே அவரவர் சார்ந்த ஊர்களின் குளங்களை தூர்வாரும் முயற்சியை தொடங்கலாம். தங்கள் ஊர் குளத்தை உடனடியாக தூர் வாரும்படி மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி கொடுக்கலாம். இதெல்லாம் நடந்தாலே ஸ்டாலின் முயற்சிக்கு வெற்றிதான்!

குளம் தூர் வாரும் பணிக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் எடுத்த அஸைன்மென்ட், மரம் நடுதல்! சென்னை தெற்கு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட முடிவெடுத்து, அண்மையில் சைதாப்பேட்டையில் அந்தப் பணியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின். இதற்காக பூவரசம், தேக்கு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை மொத்தமாக வாங்கி வைத்திருக்கிறார், தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன்.

மரக்கன்று தேவைப்படுகிறவர்களுக்கு ஐந்து தொலைபேசி எண்களை சுவர் விளம்பரங்கள் மூலமாகவும், பிட் நோட்டீஸ்கள் மூலமாகவும் இங்கு விளம்பரம் செய்திருக்கிறார்கள். பொதுமக்களில் யாராவது தங்களுக்கு மரக்கன்று தேவை என போன் செய்தால், தி.மு.க. நிர்வாகிகளில் ஓரிருவர் வீடு தேடிச் சென்று மரக்கன்றை நட்டு உரமும் வைத்துவிட்டு வந்துவிடுகிறார்கள்.

இப்படி நடப்படுகிற மரங்களை அவ்வப்போது தி.மு.க.வினரே சென்று கண்காணிக்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். ஒரு மரத்தை ஓராண்டுக்கு சிறப்பான முறையில் வளர்த்து பராமரிக்கும் பொதுஜனத்திற்கு ஸ்டாலின் மூலமாக ‘பசுமை காவலர்’ என பொறிக்கப்பட்ட சான்றிதழை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

வழக்கமாக அரசியல் கட்சியினர் தங்கள் தலைவரின் பிறந்தநாளின்போதுதான் இதுபோன்ற மரம் நடும் திட்டங்களை செயல்படுத்துவது வழக்கம். அப்படி எந்த ‘லேபிலும்’ இல்லாமல், இந்த மரம் வளர்க்கும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்ததிலும் காரணம் இருக்கிறது. அதாவது, தலைவரின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகளை வழங்கினால் மாற்றுக் கட்சியினரோ நடுநிலையாளர்களோ அவற்றை வாங்க தயங்குவார்கள். அதை தவிர்ப்பதற்கே சிறிதும் கட்சி சாயமின்றி இந்த நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறார்களாம்.

தென் சென்னையை பின்பற்றி அத்தனை மாவட்டங்களிலும் மரம் நடும் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது ஸ்டாலின் உத்தரவு! உடனே சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, ‘எனது மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுகிறேன்!’ என ஸ்டாலினிடம் கூறிச் சென்றிருக்கிறார்.

ஆனால் எப்படி குளம் துர்வாரும் திட்டத்தை, ‘ஜோசியர் சொல்லி ஸ்டாலின் செய்கிறார்’என விமர்சனங்கள் வந்ததோ, அதேபோல மரம் நடும் திட்டத்திற்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே சலசலப்புகள் கிளம்புவதுதான் வேடிக்கை! ‘2006 முதல் 2011 வரை எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க., தேர்தல் நெருங்கும் வரை சைலன்ட் மோடில் இருந்தது. கடைசி நேரத்தில் நான்கைந்து பேரணிகளை நடத்தி வெற்றியை தட்டிக்கொண்டு போய்விட்டது. தளபதி இப்பவே இப்படி செலவு இழுத்துவிட்டால், தேர்தல் நெருங்குகிற வேளையில் நாம் சுருண்டுவிட வேண்டியதுதான்!’ என மூத்த நிர்வாகிகளே தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.

தவிர, குளங்களை தூர்வாரும் பணியை முதன்முதலில் சென்னை சைதாப்பேட்டை கோதண்டராமர் கோயில் குளத்தில் ஆரம்பித்து அந்தப் பணிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் மா.சுப்பிரமணியன்தான். அவரே இப்போது மரம் நடும் திட்டத்தையும் அறிமுகம் செய்து, அதனை மாநிலம் முழுவதும் ஸ்டாலின் விரிவாக்கம் செய்ய வைத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இதர மாவட்டச் செயலாளர்கள் சிலரே மா.சுப்பிரமணியனை தொடர்புகொண்டு, ‘நீங்க எதைச் செய்தாலும் அதை மாநிலம் முழுவதும் செய்யச் சொல்றாரு தளபதி! 50 வயதைக் கடந்தபிறகும் நீங்க ஊர் ஊரா போய் மாரத்தான் போட்டியில கலந்துக்குறீங்க! எங்களையும் அப்படி ஓடச் சொல்லாம இருந்தா சரி!’ என கடுப்புடன் கலாய்க்கிறார்கள்!

இத்தனை கடுப்புகளுக்கு மத்தியிலும், கட்சியினரை வேலை செய்ய வைப்பது தமிழக அரசியலில் இப்போது ஸ்டாலினால் மட்டுமே சாத்தியம்!

×Close
×Close