மீண்டும் அரசியலுக்கு வருவாராம்! மு.க.அழகிரி சொல்வது நடக்குமா?

மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்’ என கூறியிருக்கிறார். இது நடக்குமா?

By: November 19, 2017, 12:18:38 PM

மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்’ என கூறியிருக்கிறார். இது நடக்குமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

மு.க.அழகிரிக்கு அரசியல் வாய்ப்புகளை திமுக தலைவர் கருணாநிதி எவ்வளவோ உருவாக்கிக் கொடுத்தார். தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்தவர், இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் தளபதியாகவும் அவரை முன்னிறுத்தினார். 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார பலம், பண பலம் துணையோடு இடைத்தேர்தல்களில் திமுக பெற்ற வெற்றிகள்தான் அரசியலில் அழகிரியின் அதிகபட்ச சாதனை!

மு.க.அழகிரியின் இந்த சாதனைகளுக்கு பரிசாக மன்மோகன் அமைச்சரவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்தார் அழகிரி. அந்த காலகட்டத்தில் அரசியல் ரீதியாக தன்னை வலுப்படுத்திக்கொள்ள அழகிரிக்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவரோ நாடாளுமன்றக் கூட்டங்களில் கூட சரியாக பங்கேற்காமல், அந்தப் பதவியை வீணடித்தார்.

மத்தியிலும் மாநிலத்திலும் திமுக அதிகாரங்களை இழந்த பிறகு, கட்சியில் ஒற்றைத் தலைமை என்கிற நிலையை உருவாக்க ஸ்டாலின் மும்முரமானார். திமுக ஆட்சி இருந்தபோது அழகிரியை முழுமையாக ஓரம்கட்ட முடியாத ஸ்டாலின், ஜெயலலிதா ஆட்சி நடந்தபோது அதை சாதித்தார். ஜெயலலிதா ஆட்சியில்தான் மதுரைக்குள் ஸ்டாலின் சுதந்திரமாக செல்லும் நிலையும் உருவானது.

மு.க.அழகிரி செய்த உச்சபட்ச தவறு, ஸ்டாலின் மீதான கோபத்தில் கருணாநிதியிடன் நேரடியாக தகறாறு செய்தது! தந்தை என்ற முறையில் உரிமையான மோதலாக அதை அழகிரி நினைத்திருக்கலாம். ஆனால் ஸ்டாலினும் கருணாநிதியும் கட்சியின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டிய முக்கிய கட்டமாக அதை எடுத்துக் கொண்டனர். அதன் விளைவே, கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டது!

அதன்பிறகு கருணாநிதி பேசும் வல்லமையுடன் இருந்த கடைசி நாட்கள் வரை, அழகிரிக்கு சாதகமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை. அரசியலில் அழகிரியை மீண்டும் நுழைக்கும் முயற்சியையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் கடந்த ஓராண்டாக உடல் நலப் பிரச்னைகளால் கருணாநிதி பேச இயலாதவராக உள்ளார்.

அழகிரியும் கிட்டத்தட்ட அரசியலை மறந்தவராக மெளனமாகிவிட்டார். இப்போதுதான் கட்சி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் இயங்குவதாக ஸ்டாலின் உணர்கிறார். இந்தச் சூழலில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று(நவம்பர் 19) சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அழகிரி, ‘தலைவர் நல்லாத்தான் இருக்கார். கண்டிப்பாக தலைவரை பார்ப்பேன். தலைவர் அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்’ என கூறினார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவ் அரசியலில் இருக்கும் ஸ்டாலின், முதல்வர் பதவியை நோக்கிய பயணத்தை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கிறார். அழகிரிக்கும் அவருக்கும் குடும்ப ரீதியாகக்கூட இணக்கம் ஏற்பட்டுவிட்டதாக இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. அப்படி இருக்கையில், கட்சிக்குள் மீண்டும் அழகிரியை அனுமதித்து மறுபடியும் புதிதாக ஒரு அதிகார மையத்தை உருவாக்க அவர் தயாராக இல்லை என்பதே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறும் தகவல்!

நிலைமை இப்படியிருக்க, கருணாநிதி எப்போது அழைப்பது? அழகிரி எப்படி அரசியலுக்குள் நுழைவது?

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Shall mk azhagiri enter active politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X