விசிக மாநில சுயாட்சி மாநாடு, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவை திருமாவுக்கு திறக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
மாநில சுயாட்சி என்பது திமுக.வின் முழக்கம். அதை கையில் எடுத்துக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் மாநாடு நடத்தி முடித்திருக்கிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 21-ம் தேதி இரவு இந்த மாநாடு நடந்தது. தமிழகத்தில் நாளைக்கே ஆட்சிக்கு வந்துவிட தயாரான இயக்கம் அல்ல விசிக! அப்படியிருக்க அரசியல் ரீதியாக இந்த மாநாட்டால் விசிக.வுக்கு என்ன லாபம்?
பாஜக.வின் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பதும், அந்த அணியில் இடம் பிடிப்பதுதாம் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான விசிக-வின் அஜண்டா! அதில் கணிசமான வெற்றியை இந்த மாநாடு விசிக-வுக்கு வழங்கியிருப்பதாக கூறலாம்.
இரு மாநில முதல்வர்களை அழைத்து சென்னையில் ஒரு மாநாடு என்பது பெரிய கட்சிகளுக்கே சவாலான விஷயம்! ஆனால் விசிக 3 மாநில முதல்வர்களை அழைத்தது. அவர்களில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மட்டும் ஏனோ நழுவிக்கொண்டார். கேரள முதல்வர் பினராயி விஜயனும், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமியும் வந்திருந்தது சிறுத்தைகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
இந்த மாநாட்டையொட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மட்டுமே இரு முறை சந்தித்து அழைப்பு விடுத்தார் திருமா. அதேபோல கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், பேராசிரியர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பேராசிரியர் ஜவாஹிருல்லா என ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து விழாவுக்கு வரை வைத்தார்.
இது குறித்து விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ‘அம்பேத்கர் ஓய்வே இல்லாமல் உழைத்தவர். இப்போது அவர் இருந்திருந்தால், திருமா உழைப்பதைப் பார்த்து அவர் சற்றே ஓய்வு எடுத்திருப்பார்’ என புகழ்ந்து, சிறுத்தைகளின் கைத்தட்டலை அள்ளினார்.
விடுதலை சிறுத்தைகளின் மாநில சுயாட்சி மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மாநாட்டில், 1. அரியலூர் மாணவி அனிதா, ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம், 2.மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும், 3.மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும், 4.இந்தியாவில் அதிபர் ஆட்சியை திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும், 5.ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
6.அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும், 7.ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும், 8.மாநிலங்களுக்கு பொருளாதார தற்சார்பு நிலையை உருவாக்க வேண்டும், 9.ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும், 10.மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், 11.நீதி, நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், 12.தேசிய புலனாய்வு முகமையை (NIA) கலைக்க வேண்டும், 13.கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநில பட்டியலில் சேர்த்திட வேண்டும், 14.இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மைதானம் தாங்காத அளவுக்கு விசிக தொண்டர்கள் குவிந்திருந்தனர். இரு மாநில முதல்வர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பாஜக-அதிமுக-வைத் தவிர்த்து அத்தனை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பிரமாண்ட மாநாடுதான். ஆனால் திருமாவளவனின் வழக்கமான நடைமுறைப்படி இந்த மாநாடும் திட்டமிட்டபடி மாலை 4 மணிக்கு தொடங்காமல் தாமதமானது. இரவு 11 மணிக்கு மேல்தான் மாநாடு முடிவுக்கு வந்தது.
இதனால் மீடியா கவரேஜ் முழுமையாக இல்லை. தவிர, அதே நாளில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - கமல்ஹாசன் சந்திப்பு உருவாக்கிய விவாதங்களால், இந்த மாநாட்டில் இரு முதல்வர்கள் பங்கேற்றும் ஊடகங்களில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. எனினும் பாஜக எதிர்ப்பணியில் தமிழகத்தில் விசிக தவிர்க்க முடியாத சக்தி என்பதை இந்த மாநாடு மூலமாக திருமா நிரூபித்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக் கதைவைத் திறக்க, இந்த சாவி உதவுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.