பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்கு தங்க கவசம் வந்து சேருமா? ஓபிஎஸ்.ஸிடம் வங்கி நிர்வாகம் அதனை வழங்குமா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேவரின் ஜெயந்தி தினமான அக்டோபர் 30-ம் தேதி முக்குலத்தோர் சமுதாய மக்கள் அங்கு பெருமளவில் திரள்வது வழக்கம். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி விழா வருகிற 28, 29, 30 ஆகிய தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. ஜெயந்தி விழாவின் போது அங்குள்ள தேவர் சிலைக்கு அணிவிக்க 13 கிலோ தங்கக் கவசம் ஒன்றை கடந்த 2014-ம் ஆண்டு ஜெயந்தி விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அதிமுக பொறுப்பில், மதுரை பாங்க் ஆப் இந்தியா கிளையில் அந்த கவசத்தை வைத்திருக்கவும், திருவிழாவையொட்டி அதிமுக பொருளாளர் மூலமாக அந்த கவசத்தை பெற்று விழாக் குழுவினரிடம் கொண்டு ஒப்படைக்கவும் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்தார். அதன்படியே கடந்த 3 ஆண்டுகளாக ஜெயந்தி விழாவின்போது அந்த தங்க கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழா நெருங்கிவிட்ட சூழலில் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது. வழக்கம்போல அதிமுக பொருளாளர் என்ற முறையில் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அந்த தங்க கவசத்தை கேட்டு வங்கிக் கிளையை அணுகியிருக்கிறார்கள். ஆனால் வங்கிக் கிளை சார்பில், ‘தற்போது எது உண்மையான அதிமுக என்கிற விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு அணியினரிடம் நாங்கள் எப்படி தங்க கவசத்தை தர முடியும்?’ என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இதனால் மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் இருந்து தங்க கவசத்தை பெற்று தேவர் நினைவிடம் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் 25-ம் தேதியே தேவர் நினைவிடத்திற்கு தங்க கவசம் எடுத்துச் செல்லப்படும் என்கிறார்கள். இந்த முறை வங்கி நிர்வாகத்திடம் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் பேசி வருகிறார்கள்.
அரசு தரப்பில் இதில் தலையிட்டு, நேரடியாக விழாக் குழுவினரிடம் கவசம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது. ஆனால் இது குறித்து ஓபிஎஸ்-ஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நாங்கள்தான் உண்மையான அதிமுக என வங்கி நிர்வாகத்திடம் விளக்கியிருக்கிறோம். பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு நிச்சயம் தங்க கவசம் கொண்டு செல்லப்படும்’ என்று கூறினார்.