சசிகலா நீக்கம் நடக்குமா? என்பது அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனையில் முடிவு செய்யப்பட இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகளின் இணைப்புக்கு பிறகு அதிமுக.வில் புயல் வீசி வருகிறது. சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியே ஆகவேண்டும் என்கிற நிபந்தனையுடன் தான் ஓ.பி.எஸ். அணி இணைப்புக்கு சம்மதித்தது. ஆனால் இப்போது, ‘சசிகலாவை நீக்கினால் ஆட்சியை கவிழ்ப்போம்’ என டிடிவி.தினகரன் அணி கிளம்பி நிற்கிறது.
இதற்கு தீர்வு காண, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 11 மணியளவில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. கட்சியின் புதிய ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இது.
சசிகலாவை நீக்க வேண்டிய அவசியம் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். டிடிவி.தினகரன் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை.
எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட வெகு சிலரே இந்தக் கூட்டத்தில் பேச அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதில் தலைமைக்கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டு, சசிகலா செயல்பட முடியாத சூழலில் இருப்பது குறித்து அறிக்கை விட முடிவு செய்திருக்கிறார்கள். கட்சியின் பொதுக்குழு தேதியையும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்கிறார்கள்.
பொதுக்குழுவிலும்கூட சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, சசிகலாவை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினால், இவ்வளவு நாளும் அவர் பொதுச்செயலாளராக செயல்பட்டதை அங்கீகரித்ததாக ஆகிவிடும் என்கிறார்கள், சட்ட நிபுணர்களில் சிலர். அப்படிப்பட்ட சூழலில், சசிகலாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்சிப் பதவிக்கு வர முடியாது.
எனவே முந்தையை பொதுக்குழுவில் சசிகலாவை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெறுவது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்கிறார்கள். அது நடந்தால், டிடிவி.தினகரன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலருக்கும் சசிகலா வழங்கிய கட்சிப் பதவிகள் தானாக செல்லாதது ஆகிவிடும். இந்தத் தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இரட்டை இலை சின்னத்தை பெற முடியும் என்பது இவர்களின் கணக்கு!
ஆனாலும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கு டிடிவி.தினகரன் மீது கோபம் இருந்தாலும், சசிகலா மீது ‘சாஃப்ட் கார்னரா’க இருக்கிறார்கள். சசிகலாவை நீக்கும் விவகாரத்தில் அவர்களின் ரீயாக்ஷன் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. சசிகலாவை நீக்க முடிவெடுத்தால், அந்தக் கூட்டத்திலேயே கலவரம் வெடிக்கும் என டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் பேசிய விவகாரமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை சசிகலா நீக்கம் தொடர்பான ஆலோசனை நடைபெறும் அதே வேளையில், தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உரிமைக்குழு கூடி ஸ்டாலின் உள்பட 20 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை பற்றி விவாதிக்கிறது. இந்த இரு கூட்டங்களும் அரசியல் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.