கதிராமங்கலம்: கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்ட வணிகர்கள்

கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், வணிகர்கள் தங்கள் கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்டனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து, அதன் மூலம் எண்ணெய் நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கதிராமங்கலம் மக்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்கள் கிராமத்தில் மீத்தேன் திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்த முனைவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி, எரிபொருள் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், அப்பகுதியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில், “கதிராமங்கலத்தில் போராட்டத்தின் போது மக்களில் சிலர், காவல் துறையினர் மீது கற்களை வீசினார்கள். இதில், காவல் ஆய்வாளர் உட்பட மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. மேலும், வைக்கோல்களை வழிப்பகுதியில் போட்டு அதற்கு தீ வைத்தனர். இதனால், காவல்துறையினரை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கதிராமங்கலத்தில் போதுமான பாதுகாப்பு போடப்பட்டு, அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது” என தெரிவித்தார்.

இதனிடையே, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள அய்யனார் கோவிலில் மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்களும் கடந்த 30-ஆம் தேதி முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வணிகர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு புதன் கிழமை கடைகளை திறந்தனர். இருப்பினும், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close