ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலி விபத்துகளால் ஏற்படும் பரணங்கள் தமிழகத்தில் தான் அதிகம். ஆண்டு தோறும் சாலை விபத்துகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை மட்டும் 9,231 விபத்துகளில் 9,881 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துக்கு ஓட்டுனரின் தவறு, மோசமான வானிலை, மோசமான சாலை, எந்திரக் கோளாறு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பெரும்பாலான விபத்துகள் ஓட்டுனரின் தவறாலேயே ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு, போக்குவரத்து முதன்மை செயலர் இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் பாதுகாப்புக்காக மத்திய மோட்டார் வாகன விதிகள், மாநில விதிகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த விதிகள் கொண்டு வரப்பட்டன. அவையெல்லாம் ஓட்டுனரின் செயல்பாட்டை நிர்வகிப்பதற்காகவும், போக்குவரத்து குற்றங்களை தவிர்ப்பதற்காகவும் கொண்டு வரப்பட்டன.
வாகனத்தை ஒவ்வொருவருக்கும் விற்பனை செய்யும் போது, விற்பனையாளர்கள் கண்டிப்பாக இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். அதேபோல், வாகனத்தை வாங்கும் ஒருவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் அவர்களது வாகனத்தை பதிவு அதிகாரியோ, துணை பதிவு அதிகாரியோ பதிவு செய்யக் கூடாது. இந்த விதிகளை பற்று அவரவர் அதிகார எல்லைக்குட்பட்ட விற்பனையாளர்களிடம் வாகனப் பதிவு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Should not register vehicles to the person who dont have driving license