சட்டசபை இன்று தொடங்கியதும் கேள்வி பதில் நேரத்திற்கு பின், எம்.எல்.ஏ. சரவணனின் பேர வீடியோ விவகாரம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதனை ஏற்க மறுத்து, பதில் அளித்த சபாநாயகர் தனபால், 'இந்த விவகாரத்தின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதனைப் பற்றி விவாதிக்க முடியாது' என்றார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், "காவிரி விவகாரத்தின் வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போதே, அதனை பற்றி சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. அதைப் போன்று இந்த விவகாரத்திலும் விவாதிக்க வேண்டும்" என்றார். ஆனால், தொடர்ந்து சபாநாயகர் தனபால் இதனை மறுத்து வருகிறார்.
இதனால், சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.
சட்டசபைக்கு எம்.எல்.ஏ. சரவணனும் வந்துள்ளார். பன்னீர் செல்வம் உட்பட அவரது அணியில் உள்ள உறுப்பினர்களும் சட்டசபையில் அமர்ந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டு வருவதால், "சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.