தயாநிதி… உதயநிதி…! திமுக வாரிசுகளுக்கு ‘டஃப்’ கொடுக்கும் டாக்டர் வாரிசு!

Shyam Krishnasamy: இது என்ன சினிமாவா இஷ்டத்திற்கு அடிச்சு விட? இந்த விசயத்தை பற்றி சிறிய அளவு புரிதலாவது இருக்கா? 2004-2014 ஆண்டுகள் கூட இதே நடைமுறை தான் இருந்தது.

By: Updated: May 17, 2020, 08:05:09 AM

ஷ்யாம் கிருஷ்ணசாமி… திமுக.வினருக்கு வேப்பங்காயாக கசக்க ஆரம்பித்திருக்கிறது இந்தப் பெயர்! காரணம், தயாநிதி விவகாரத்தில் இருந்து உதயநிதி வரை உடனுக்குடன் இவர் கொடுக்கும் அதிரடி ஸ்டேட்மென்ட்களில் அவ்வளவு காரம்!

ஷ்யாம் கிருஷ்ணசாமி, வேறு யாருமல்ல… புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் தான்! மருத்துவரான ஷ்யாம், அப்படியே தனது தந்தையின் அரசியல் நிலைப்பாடை கெட்டியாக பிடித்துக் கொண்டு அதிரடி கிளப்பி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் கடந்த 14-ம் தேதி தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள் குழு தாங்கள் அவமதிக்கப்பட்டதாக குமுறியது. அப்போது நிருபர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்.பி., ‘நாங்கள் தாழ்த்தப்பட்ட ஆட்களா?’ என பேச்சுவாக்கில் குறிப்பிட்டார்.

அப்போதைக்கு பலரும், ‘இது உள்நோக்கமற்றப் பேச்சு’ என கடந்து செல்லத் தயாராக இருந்தனர். அந்த நிலையில், ட்விட்டரில் தயாநிதியின் சமூகப் பின்புலம் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பி, மிகக் காட்டமாக ஒரு பதிவை இட்டார் ஷ்யாம்! இதன்பிறகே இந்த விவகாரம், திமுக.வுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் அளவுக்கு சூடு பிடித்தது.

மறுநாள் தயாநிதி வருத்தம் தெரிவித்த பிறகும், ஷ்யாம் விடவில்லை. ‘கடைநிலை திமுக நிர்வாகி செயலுக்கு பிரியாணி கடை சென்று மன்னிப்பு கேட்ட ஸ்டாலின் அவர்கள், கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் MPயின் சாதிய வன்மம் நிறைந்த பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவிக்காதது ஏன்? கட்சியினரை எச்சரிக்காதது ஏன்?
திராவிட சமூகநீதி – வெற்று கோஷம்’ என பாய்ச்சல் காட்டினார்.

திமுக தோழமைக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு இந்த விவகாரம் நெருக்கடியை உருவாக்கியது. அவரது கட்சிக்குள்ளேயே சிலர், ‘தயாநிதிக்கு நீங்கள் பதில் சொல்கிறீர்களா, எங்கள் பாணியில் நாங்கள் பதிலடி கொடுக்கட்டுமா?’ என கொந்தளித்தனர். ஏற்கனவே வைகோ பேச்சு ஒருமுறை இதேபோல சர்ச்சைக்குள்ளானபோது, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு காட்டமாக அறிக்கை விட்டது நினைவிருக்கலாம்.


அதேபோன்ற சூழலைத் தவிர்க்க இந்த முறை திருமாவே, ‘தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’ என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்.’ என தயாநிதியின் பெயரைக்கூட குறிப்பிடாமல் மென்மையாக அறிக்கை விட்டார் திருமா. அந்த ‘மென்மை’யும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்தப் பஞ்சாயத்து ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க… அடுத்த விவகாரம், உதயநிதி ஸ்டாலின் போட்ட ஒரு ட்வீட்! ‘முதுநிலை மருத்துவ படிப்பில் OBC-க்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்து அவற்றை உயர்பிரிவினர் அடங்கிய பொது ஒதுக்கீட்டில் சேர்த்து பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்கும் பாசிச பாஜக அரசையும், அரசியலமைப்புக்கு எதிரான இம்முடிவை கண்டிக்காத அடிமை அதிமுகவையும் கண்டிக்கிறோம்’ என குறிப்பிட்டார் உதயநிதி.

இது ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை மூலமாக சுட்டிக்காட்டிய விவகாரம்தான். அதையே உதயநிதி, மத்திய பாஜக அரசுதான் இட ஒதுக்கீடை மாற்றி அமைத்ததுபோல குறிப்பிட்டதுதான் பிரச்னை! இதை பாஜக.வினரே கவனிக்காத நிலையில், ஷ்யாம் கையிலெடுத்தார்.


உதயநிதியின் ட்வீட்டை ‘டேக்’ செய்த ஷ்யாம், ‘இது என்ன சினிமாவா இஷ்டத்திற்கு அடிச்சு விட? இந்த விசயத்தை பற்றி சிறிய அளவு புரிதலாவது இருக்கா? திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த 2004-2014 ஆண்டுகள் கூட இதே நடைமுறை தான் இருந்தது என்று தெரியுமா? அப்போ பாசிச காங்கிரஸ், அடிமை திமுகவா?’ என காட்டம் காட்டினார். இது தொடர்பான ஆதாரங்கள், பி.டி.எஃப் ஃபைல் ‘லிங்’களையும் அடுத்தடுத்து வெளியிட்டார் ஷ்யாம்.


இதேபோல திமுக ஊடகத் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்ட ட்வீட்டை ‘டேக்’ செய்த ஷ்யாம், ‘மருத்துவ இடங்களுக்கான சேர்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு முறையில், 2004-2014 முதலான ஆண்டுகளுக்கும், இந்த ஆண்டுக்கும் என்ன வேறுபாடு?’ என கேள்வி எழுப்பினார். மருத்துவரான ஷ்யாம் இந்த விஷயத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு திமுக தரப்பில் பதில் இல்லை.

இந்த பிரச்னை மட்டுமல்லாமல், திமுக.வின் ஒன்றிணைவோம் வா பிரசாரத்திற்காக ஃபேஸ்புக்-கில் ஒரு பெரும் தொகை செலவிடப்பட்டதாக சில ஆதாரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார் ஷ்யாம். புதிது புதிதாக ‘எதிரி’களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது திமுக.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Shyam krishnasamy tweets against dayanidhi maran udayanidhi stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X