Siddha Tamil News: சென்னையில் கொரோனாவை ஒழிக்க சித்த மருத்துவர்கள் முழு வீச்சில் களம் இறங்க தயாராகிறார்கள். இதற்கான முக்கிய முடிவை சென்னை மாநகராட்சி இன்று (18-ம் தேதி) எடுக்கிறது.
கொரோனா வைரஸ், உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இதற்கு தடுப்பு மருந்தையோ, முழுமையாக குணமாக்க வல்ல பொருத்தமான மருந்தையோ இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் நாளுக்கு நாள் எகிறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அச்சுறுத்துவதாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய மருந்தான சித்த மருந்துகள், இதில் புதிய நம்பிக்கையை விதைக்கின்றன. அண்மையில் சென்னை புழல் சிறையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 160 பேரை குணப்படுத்தும் பொறுப்பை சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்தா நிறுவனம் ஏற்றுக்கொண்டது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் நிறுவனம் இது.
இங்கு ஐந்தே நாட்களில் மேற்படி 160 கைதிகளும் சித்த மருத்துவத்தால் குணமாகியிருக்கிறார்கள். கபசுரக் குடிநீர் மற்றும் ஓரிரு சித்தா மாத்திரைகள் மூலமாக இவர்கள் குணமடைந்தனர். தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, சித்த மருத்துவத்தை பரவலாக பயன்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சித்த மருத்துவத்தை முழு வீச்சில் பயன்படுத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி முடிவு செய்திருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் ‘ஐஇ தமிழ்’-டம் தெரிவித்தார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ‘மொத்த தமிழக அரசுக்குமே சென்னையின் நிலைதான் பெரிய தலைவலியாக இருக்கிறது. இங்கு தற்போது சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அலோபதி மருத்துவர்களிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா பாதிப்பில் இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி டீனும் கூட இதற்கு தப்பவில்லை.
எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா பாதிப்பால் குடும்பத்துடன் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பது, முதல்வரின் தனிச் செயலாளர் தாமோதரன், மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என அடுத்தடுத்து முக்கியப் பிரமுகர்கள் பலியாகி வருவது மக்களின் நம்பிக்கையை குலைக்கக் கூடும்.
எனவே கொரோனாவுக்கு எதிராக அத்தனை ஆயுதங்களையும் பயன்படுத்தி ஆகவேண்டிய காலகட்டம் இது. அந்த வகையில் சித்த மருத்துவத்தையும் முழுவீச்சில் சென்னையில் பயன்படுத்த அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக இன்று (18-ம் தேதி) தேசிய சித்தா நிறுவன மருத்துவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை சந்திக்கிறார்கள். இதில் சித்த மருத்துவத்தை சென்னையில் பயன்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்’ என்றார் அந்த அதிகாரி.
முதல் கட்டமாக சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சுமார் 250 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டுகள் அமைத்து அவற்றை முழுமையாக சித்த மருத்துவர்கள் வசம் ஒப்படைக்க இருப்பதாக தெரிகிறது. வட சென்னையில் எகிறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த இது முக்கிய நடவடிக்கையாக அமையும். இதற்கான அம்பேத்கர் கலைக்கல்லூரியில் வார்டுகளை தயார் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் இருக்கின்றன. இவற்றில் 6 மண்டலங்களில்தான் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். எனவே இந்த 6 மண்டலங்களில் தலா இரு மண்டலங்களுக்கு ஒரு சித்த மருத்துவ மையம் அமைக்கலாம் என்கிற கருத்து இருக்கிறது. இதர மண்டலங்களில் 3 அல்லது 4 மண்டலங்களுக்கு ஒரு சித்த மருத்துவ மையம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது உள்ளாட்சித் துறை அமைச்சரால் இன்று வெளியிடப்படலாம்.
அலோபதியை ஒப்பிடுகையில் சித்த மருத்துவம் மிகக் குறைந்த செலவிலானது. மருந்துகளை வேறு எங்கிருந்தும் இறக்குமதி செய்யத் தேவையில்லை. இங்கேயே தயாரிக்கப்படும் மருந்துகள் இவை. எனவே நிதி ஒதுக்கீடு, மருந்துத் தட்டுப்பாடு, மருந்துகளை வாங்குவதில் கமிஷன் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
புழல் சிறைக் கைதிகளுக்கு 5 நாட்களில் கொரோனா விரட்டப்பட்டது போல, முழு சென்னைவாசிகளுக்கும் சித்த மருத்துவம் பயனுள்ளதாக மாறினால் அதைவிட சந்தோஷம் என்ன இருக்கிறது?