ஐநா.வில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்ற நிகழ்வுக்கு 4 நாட்களுக்கு பிறகு கண்டன அறிக்கை விட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி தொடங்கி 19 நாட்கள் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 2 முறை பேசினார்.
வைகோ தனது பேச்சை முடித்த சில நிமிடங்களிலேயே, கவுன்சில் வளாகத்தில் இலங்கையை சேர்ந்த சிங்களர்கள் வைகோவை சூழ்ந்து தகராறு செய்தனர். அவர்களில், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் இருந்ததாக கூறப்படுகிறது.
வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஐ.நா. சபையிடம் தமிழ் அமைப்புகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது, அவருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இரு பாதுகாப்பு அதிகாரிகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்து உள்ளது.
இந்நிலையில் வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து செப்டம்பர் 29-ம் தேதி பிற்பகலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டார். மேலும் வைகோவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வைகோவை சிங்களர்கள் தாக்க முற்பட்ட செயல் கண்டனத்துக்குரியது. வைகோ மீதான தாக்குதல் முயற்சி செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் வருங்காலத்தில் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகோவுக்கு பாதுகாப்பு தர உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வைகோ மீதான தாக்குதல் முயற்சி செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற்றது. அன்றே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை விட்டதுடன், ‘மத்திய அரசு இதை கண்டிக்க வேண்டும்’ என குறிப்பிட்டார். தமிழகத்தில் வேறு பல கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்பின. ஆனால் அதிமுக தரப்பில் யாரும் அதை கண்டிக்கவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா தலைமையில் அதிமுக இயங்கியபோது வைகோ.வின் செயல்பாடுகள் அதிமுக.வுக்கு சாதகமாக இருந்தன. டிடிவி.தினகரன் தலைமை மீதும் சாஃப்ட் கார்னரை வைகோ வெளிப்படுத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்க ஆரம்பித்தபிறகு, அரசு மீதான ‘அட்டாக்’கை அதிகப்படுத்தினார். குறிப்பாக சென்னையிலேயே எடப்பாடி அரசை பதவி விலக வற்புறுத்தி வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனாலேயே வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இதற்கிடையே மதிமுக சார்பில் சிங்களர்களை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்ப் புலிகள் அமைப்பு சார்பில் செப்டம்பர் 29-ம் தேதி காலையில் சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்திற்கு சென்றிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதுவும் கண்டனத்திற்கு உள்ளானது.
ஜெயலலிதாவின் கடைசி காலகட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்னையில் திமுக.வை விட அதிமுக.வின் குரலே வலுவாக ஒலித்தது. ஆனால் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் அதிமுக.வுக்கு பின்னடைவை உருவாக்கியிருக்கின்றன.
ஐ.நா.வில் வைகோ மீதான தாக்குதல் முயற்சியை கண்டிக்காமல் விட்டாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி அதிகரிக்கும் என முதல்வரிடம் சொல்லப்பட்டதாக தெரிகிறது. அதனாலேயே இந்த விவகாரத்தில் 4 நாட்களுக்கு பிறகு அறிக்கை விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் மதிமுக தரப்பில் இந்த அறிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.