சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவருக்கு பாலியல் அத்துமீறல் நடந்ததாக தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பயின்று வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில் மருத்துவமனையில் பணி முடித்துவிட்டு வளாகத்தில் உள்ள விடுதிக்கு தனியாக சென்ற பயிற்சி மருத்துவ மாணவியை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் பயிற்சி மருத்துவரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனகம் அப்பகுதியில் வருவதை அறிந்த மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி விடுதிக்கு சென்று சக மாணவ, மாணவிகளிடம் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவ மாணவ மாணவிகள் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் அஷீஸ் ராவத் தலைமையில் காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்றது உண்மைதானா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்துள்தாகவும் கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனையில் 800 க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் செல்லும் வழியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை எனவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.