பெண் வக்கீலுடன் பழகியதற்காக, ‘அமெரிக்க ரிட்டர்ன்’ பொறியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. நெல்லையில் இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது.
கொலை செய்யப்பட்ட பொறியாளரின் பெயர், முத்துகிருஷ்ணன் (வயது 47). தூத்துக்குடி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் இவர். சாப்ட்வேர் என்ஜினீயரான முத்துகிருஷ்ணன், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே நீண்டகாலம் பணியாற்றினார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி திரும்பினார் இவர். இங்கு இவருக்கும் இவரது மனைவிமுத்துச்செல்விக்கும் ஒத்துப் போகவில்லை.இந்த தம்பதியருக்கு 2 மகள்களும் உண்டு. உறவினர்கள் எவ்வளவோ பேசிப் பார்த்தும், சுமூகமான நிலையை உருவாக்க முடியாததால் மனைவியை பிரிந்துவிட முடிவெடுத்தார் முத்துகிருஷ்ணன்.
இதற்காக திருநெல்வேலியில் ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று வந்தார் முத்துகிருஷ்ணன். அந்த வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு இவர் அடிக்கடி செல்லும்போது, அங்கு பணியில் இருந்த ஜூனியர் பெண் வழக்கறிஞர் ஒருவருடன் முத்துகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ம் தேதி திருநெல்வேலிக்கு கிளம்பிச் சென்ற முத்துகிருஷ்ணன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக முத்துகிருஷ்ணனின் தாயார் அம்மைமுத்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனுவை அம்மைமுத்து தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, முத்துகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ராஜகோபால் (25) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
ராஜகோபால் கொடுத்த வாக்குமூலமாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.. ‘நான் சொந்தமாக லாரி வைத்து, அதில் டிரைவராக பணி செய்கிறேன். எனது மனைவி வழக்கறிஞராக இருக்கிறார். அவரை நான் காதலித்து மணந்தேன். எனது மனைவியுடன் அடிக்கடி முத்துகிருஷ்ணன் தொடர்புகொண்டதும், நெருக்கமாக பழகியதும் எனக்கு பிடிக்கவில்லை.
இது தொடர்பாக முத்துகிருஷ்ணனை நேரடியாக அழைத்து எச்சரித்தேன். அவர் என்னை அவமானப்படுத்தும் விதமாக பேசியதுடன், எனது மனைவியின் நட்பையும் விட மறுத்தார். கடந்த மே 19-ம் தேதி இது தொடர்பான தகராறில் எனது மனைவி கண் எதிரே என்னை முத்துகிருஷ்ணன் தாக்கினார்.
எனவே இதற்கு மேலும் அவரை விட்டுவைப்பது சரியல்ல என்கிற முடிவுக்கு வந்தேன். மே 22-ம் தேதி முத்துகிருஷ்ணன் நெல்லைக்கு வர இருப்பதாக எனக்கு தெரியவந்தது, எனது நண்பர்கள் மூவருடன் அவரை எதிர்பார்த்து, மாநகர எல்லையான கே.டி.சி. நகர் பகுதியில் நின்றிருந்தேன்.
முத்துகிருஷ்ணன் கார் வந்ததும், நிறுத்தினோம். பழைய பகையை மனதில் வைத்துக்கொள்ளாததுபோல பேசி, நாங்கள் நால்வரும் அவரது காரில் ஏறிக்கொண்டோம். பிறகு காரை அந்த ஏரியாவில் ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று அரிவாளால் முத்துகிருஷ்ணனை துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றோம்.
அவரது பிணத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி, நெல்லையை அடுத்த தாழையூத்து பாப்பாக்குளம் பகுதிக்கு கொண்டு வந்தோம். அங்கு ஒரு கல் குவாரியில் நிறைய தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அந்தத் தண்ணீருக்குள் காருடன் முத்துகிருஷ்ணனின் பிணத்தை தள்ளிவிட்டோம்.
ஒரு மாதத்திற்கு பிறகும் போலீஸ் எங்களை கைது செய்யாததால் தப்பிவிட்டதாக நினைத்தேன். ஆனால் இப்போது மாட்டிக்கொண்டேன்!’ என கூறியிருக்கிறார் ராஜகோபால்.
இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் மேற்படி கல்குவாரிக்கு சென்று காருடன் முத்துகிருஷ்ணனின் பிணத்தை மீட்டனர். 49 நாட்களாக காருடன் பிணம் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்ததால் அழுகியிருந்தது. துர்நாற்றமும் வீசியது. அங்கேயே மருத்துவர்கள் வந்து, பிரேத பரிசோதனை செய்தனர்.
கொலைக்கு துணைநின்ற ராஜகோபாலின் நண்பர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கமலஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் வருவதுபோல கல்குவாரி தண்ணிருக்குள் காருடன் பிணத்தை தள்ளி, கொலையை மறைக்க திட்டமிட்ட நிகழ்வு தென்மாவட்டங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.