scorecardresearch

தூக்கு தண்டனை வேண்டாம்; இன்னொரு யுவராஜ் உருவாகக் கூடாது என்பதே முக்கியம்: வழக்கறிஞர் ப.பா.மோகன்

ஆணவப் படுகொலைகள் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்களின் மீது செலுத்தப்படும் அடைக்குமுறையே காரணம் : விசிகவிசிக.வின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்பு மாநாடு

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு மாநாடு மார்ச் 21ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர், கே. சாமுவேல்ராஜ் கூறியதாவது:

“தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க.வைத் தவிர அனைத்து கட்சிகளும் ஆதி திராவிடர் படுகொலைக்கு எதிரான தனி சிறப்புச் சட்டத்தை கொண்டுவருவோம் என்று வாக்குமூலம் விடுத்தார்கள். இருப்பினும், தொடர்ச்சியாக படுகொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், சேலத்திலிருந்து சென்னை வரை, ஒற்றை கோரிக்கைக்காக (சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம் வேண்டும் என்று) 13 நாட்களுக்கு (ஏறக்குறைய 320 கி.மீ. தூரத்திற்கு) பிரம்மாண்டமான நடைப்பயணத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் மேற்கொண்டனர்.”

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத் தலைவர், பி. சம்பத் கூறியதாவது:

“ஆணவ படுகொலைகளால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களையும் குடும்பங்களையும் பார்க்கும்பொழுது மனதிற்குள் ஒரு ஆவேசம் வருகிறது. இந்த ஆவேசம் தான் ஒரு எழுச்சியாக உருமாறும், இந்த எழுச்சி போராட்டமாக மாறும், அந்த போராட்டங்களின் இறுதி விளைவாக சாதி ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல சாதி அமைப்பே சவக்குழிக்குள் அனுப்பப்படும். இந்த நாளுக்கு வரலாற்றில் கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.

சாதி அமைப்புகள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி ஏன் நம் நாட்டில் மட்டும் இவ்வளவு காலம் நீடிக்கிறது? சாதி ஆணவ படுகொலைகளுக்காக சட்டம் இயற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக போராடியும் ஏன் தீர்வு இன்னும் வரவில்லை? ஆளுங்கட்சிக்கு இங்கு நடக்கும் அநியாயங்கள் தெரிந்தும் ஏன் ஒரு சட்டம் கொண்டு வர இவ்வளவு தாமதம் ஆகிறது? என்ற கேள்விகள் எல்லோர் மனத்திலும் எழும். இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், சாதி கட்டமைப்பினால் இங்கு பலனடைகிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இங்கு ஒரு குறிப்பிட்ட மக்களின் மனதில் அவர்கள் கீழ் சாதி என்ற மனநிலையை கொண்டுவந்து, அவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.

ஆகையால், ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படும் மக்களுக்கான தேவைகளையும் பாதுகாப்பையும் கொடுக்கவில்லை என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆளும் வர்க்கமாக மாறுவார்கள்.ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரமும் அரசும் வரும்பொழுது, இந்த சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டம் மட்டும் இல்லை, சாதி ஒழிப்பு சட்டங்களும் வரும்.”

சாதி ஆணவப் படுகொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தபோது

ஐந்திணை மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், வை. தேவதாசு கூறியதாவது:

“சட்டத்தின் பிடியால் சாதி ஆதிக்கர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்துவிட்டால், சாதி ஆதிக்கம் குறையும் என்று சொன்னால் என்னை பொறுத்தவரை அது மாயை தான். கடுமையான சட்டத்தை கடைபிடிக்கும் அரபு நாடுகளிலும் கூட குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

சாதி என்பது ஒவ்வொரு மனிதனின் மூளையிலும் உட்காந்து கொண்டிருக்கிறது. சாதி ஆணவக்கொலைகளுக்கு காரணமான வர்ணாசர தர்மத்தை மக்கள் மத்தியிலிருந்து போக்கவேண்டும் என்றால், நம்மை போன்ற இளைஞர்களும், கட்சிகளும் எங்கே சாதி ஆதிக்கம் இருக்கிறதோ அங்கு அதை ஒழிக்கும் வண்ணம் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.”

சி.பி.ஐ.யின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது:

“ஒடுக்கப்பட்ட மக்கள் தான் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் அடித்தளமாக இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தான் சாதி வேண்டாம் என்று மிகுந்த சிறந்த பார்வையுடன் கூறுவார்கள். அவர்கள் தான் எந்த ஒரு சாதியையும் தனக்கு கீழானது, பகையானது என்று கூறமாட்டார்கள். அவர்களின் கரங்கள் மட்டும் தான் சகோதர எண்ணத்துடன் உதவும். எனவே, ஜனநாயகத்தின் உச்சம் என்று அவர்களை சொல்லலாம். 

கிராமப்புறங்களில் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று கூறும் மக்கள் அனைவரும், ஒரு பிரச்சனை என்று வந்தால் உளவியலாகவே ஒன்று கூடி விடுகிறார்கள். ஆனால், பிறப்பால் தாழ்வு என்று கூறப்படும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனால், இந்த அநியாயங்களை சட்டத்தின் மூலமாக சரிசெய்ய முடியும். சட்டத்திற்கு முன், என் வாக்கிற்கும் அம்பானி வாக்கிற்கும் ஒரே மதிப்பு. ஆகையால், சட்டத்தை சரியாக கையாள வேண்டும் அப்போது தான் இதுபோன்ற கொடுமைகள் ஒழியும்.” 

தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறியதாவது:

“நம்மூரில் சாதி என்னும் கருவியை பாதுகாக்க பெண்களை பயன்படுத்துகிறார்கள். சாதி மறுப்பு திருமணம் செய்தால் ஏன் கொலை செய்கிறார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும். இதற்க்கு காரணம் என்னவென்றால், சாதி மறுப்பு திருமணம் செய்துவிட்டால், இரண்டு சாதிகள் ஒன்று சேர்ந்துவிடுகிறது, ஒன்று சேர்ந்துவிட்டால் அது மனு தர்மத்தை கேள்வி எழுப்பும். எனவே, யாரும் யாரோடும் ஒன்று சேர்ந்துவிட கூடாது என்பது தான் அவர்களின் கோட்பாடு.”

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியதாவது:

“எவரெல்லாம் சாதி ஆணவப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் ஹிந்து மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம். யாரெல்லாம் ஹிந்து என்ற மதத்தை உள்வாங்கிக்கொண்டார்களோ, அவர்கள் எல்லோரும் சாதியத்தை, சனாதனத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று தான் அர்த்தமாகும். 

இன்று ஹிஜாப் அணிவதில் சர்ச்சை நிலவுவதை நாம் அனைவரும் பார்க்க முடிகிறது. ஹிஜாப் என்பது பெண்கள் சம்மந்தப்பட்ட உரிமை மட்டும் இல்லை, ஒரு மதத்தின் அடையாளம் மட்டும் இல்லை. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் அடையாளம் ஆகும். சங்பரிவார் அமைப்புகள் இந்தியாவை “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம்” என்று நிறுவுவதற்காக, இது போன்ற அடையாளத்தை தகர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் சபரி மலையில் பெண்களை அனுமதிக்காதது, ஆணவப் படுகொலைகள் ஆகிய அணைத்து சர்ச்சைகளுக்கும் பெண்களை வைத்தே அடக்குமுறையை கையாளுகிறார்கள்” 

வழக்கறிஞர் நிர்மலா ராணி கூறியதாவது:

“2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், ஆணவப் படுகொலைகளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்தேன். அதில் நான் ஆராய்ச்சி செய்த 88 வழக்குகளில், 83% கொலைசெய்யப்பட்டவர்கள் பெண்கள் என்பதை தெரிந்துகொண்டேன். ஆதிக்க சாதியிலிருந்து வரும் பெண்களின் மரணத்திற்கு இங்கு அமைக்கப்பட்டிருக்கும் SC/ST சட்டம் பாதுகாக்காது. ஆகையால், சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கேட்டு போராடுகிறோம்.”

வழக்கறிஞர் ப.பா.மோகன் சமூகத்தில் சாதியின் தாக்கத்தைப் பற்றி உரையாற்றியபோது

கோகுல்ராஜ் கொலைவழக்கில் வாதாடி வென்ற வழக்கறிஞர் ப.பா. மோகன் கூறியதாவது:

“இந்த இந்திய சமூகத்தில் சுகந்திரத்திற்கு முன்னால், இரண்டு போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தது. ஒன்று, 250 ஆண்டுகளுக்கான சுதந்திர போராட்டம். இரண்டாவது, 2000 வருடங்களுக்கான சமூக போராட்டம். 

கோகுல்ராஜ் கொலை வழக்கில், யுவராஜிற்கு தூக்கு தண்டனை வழங்க கூறி மக்கள் எதிர்பார்த்தாலும், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னை பொறுத்தவரை, யுவராஜை தண்டிப்பதைவிட, இன்னொரு யுவராஜ் உருவாகிவிட கூடாது என்பது தான் நோக்கமாக இருக்கிறது.

நான் கீழடி சென்றிருந்த பொது, அங்கு நான் எனக்கு சாமியும் தெரியவில்லை சாதியும் தெரியவில்லை. ஆகையால், மனுதர்ம கோட்பாட்டின் வழி வரும் சாதிய கட்டமைப்பை ஒழிப்பதற்கு சிறப்பு பிரிவுகளுடன் கூடிய சிறப்பு சட்டத்தை கொண்டுவரவேண்டும்”

இம்மாநாட்டில், ஆணவப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டு உறுப்பினர்களை இழந்த குடும்பத்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிபிஐ-எம் மாநிலச் செயலாளர் கௌரவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Solution to these problems is to eradicate caste tamil nadu untouchability front