குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16 ஆம் தேதி இரவு முதல் 18 ஆம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது.
தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் வெள்ளம் வடிந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்னும் சில கிராமங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் பல கிராமங்களில் நெல், வாழை போன்ற விளைநிலங்கள் முற்றிலும் சேதமானதால் விவசாயிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில், வல்லநாடு மலையோரத்தில் அமைந்துள்ளது ஆழ்வார்கற்குளம் கிராமம்.
மழை வெள்ளத்திலும், பல குளங்கள், வாய்க்கால்கள் உடைந்ததாலும் இங்குள்ள வயல்கள், விளை நிலங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அரசு தரப்பில் இருந்தும் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை, என்றும் கிராமத்தினர் கூறுகின்றனர்.
நகையை அடமானம் வச்சு ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி விவசாயம் பண்ணோம்.. வெள்ளத்துல எல்லாமே போச்சு.. அரசாங்கமும் உதவலன்னா இனி நாங்க கூலித் தொழிலுக்கு தான் போகணும்- வல்லநாடு விவசாயி வேதனை#SouthTNRains | #SouthTNFloods | #Tirunelvelifloods | #TuticorinFloods pic.twitter.com/dSSqhr2MzD
— Indian Express Tamil (@IeTamil) December 22, 2023
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ’வீட்டுல இருக்கிற நகை நட்டு எல்லாம் அடமானம் வச்சு ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி நாத்து பாவி நட்டு விவசாயம் பண்ணோம். ஆனா இங்க பெய்ஞ்ச மழையில மருதூர் கீழ் வாய்க்கால் உடைஞ்சு வயக்காட்டுக்குள்ள வெள்ளம் வந்து எல்லாமே சேதம் ஆயிடுச்சு.
இன்னைக்கு தேதி வரை தண்ணி வடியல. வாய்க்கால்ல உள்ள தண்ணி எல்லாம் வயல் வழியாதான் போயிட்டு இருக்கு. அரசாங்கம் ஏதாவது உதவி செய்ஞ்சா மட்டும்தான் நாங்க மறுபடியும் விவசாயம் பண்ண முடியும். விவசாயத்துல போட்டாலும் எங்களுக்கு வருமான கிடையாது.
அவ்வளவு நஷ்டத்துல விவசாயம் பண்ணாலும் நாங்க கடனாளியா தான் இருக்கோம். முன்னுக்கு வர முடியல. அதுல இயற்கை சீற்றமும் எங்களை பாதிச்சா நாங்க எப்படி விவசாயம் பண்றதுனே எங்களுக்கு தெரியல. விவசாயத்தை விட்டுட்டு வேற கூலித் தொழிலுக்கு போற நிலைமைக்கு நாங்க வந்துட்டோம்.
வயல்ல இருக்கிற மண்ண அப்புறப்படுத்தவே எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மேல செலவு ஆகும். அதுவும் இந்த மாதிரி நேரத்துல ஆளும் கிடைக்கமாட்டுக்கு.
இதெல்லாம் சுத்தம் பண்ணவே எங்களுக்கு மாசக்கணக்குல ஆகும். இனி நாங்க எப்போ விவசாயம் பண்ணி, எப்போ அறுவடை பண்ணி அடகு வச்சு நகையெல்லாம் மீட்க போறோம்னு தெரியல.
விவசாயிங்களை காப்பாத்த அரசாங்கத்தால மட்டும்தான் முடியும்.
6 நாட்கள் ஆகியும் வடியாத வெள்ளம்.. குளம் போல காட்சியளிக்கும் வயல்கள், நாசமான பயிர்கள்.. உடைந்த வாய்க்கால்களை சரி செய்யவே லட்சகணக்கில் செலவாகும்- அரசாங்கம் கைகொடுக்குமா? கண்ணீரில் ஆழ்வார்கற்குளம் விவசாயிகள்#SouthTNRains | #SouthTNFloods | #Tirunelvelifloods | #TuticorinFloods pic.twitter.com/bIHe5jQq1T
— Indian Express Tamil (@IeTamil) December 22, 2023
அரசாங்கம் எங்களுக்கு ஏதாவது கருணை காட்டி, இந்த மண்ணை அப்புறப்படுத்தவும், திரும்ப விவசாயம் செய்றதுக்கு ஏதாவது மானியம், உரங்கள் கொடுத்து உதவி செய்ஞ்சா மட்டும்தான் எங்களுக்கு விவசாயமே பண்ண முடியும். இல்லன்னா நாங்களும் விவசாயத் தொழிலை விட்டுட்டு வேற ஏதாவது கூலித் தொழிலுக்குத் தான் மாறவேண்டிய சூழ்நிலை இருக்கும்’, என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஆழ்வார்கற்குளம் கிராம விவசாயிகள்..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.