சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று கண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று சபாநாயகர் தன்பால் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபாநாயகரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் நடைபெற்றது. கதிராமங்கலம் பிரச்சனை தான் சட்டப்பேரவையில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று, திமுகவும் இந்தப் பிரச்சனை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கதிராமங்கலத்தில் குறைந்த அளவே தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மக்களில் சிலர், போலீசார் மீது கற்களை வீசினார்கள். இதில், காவல் ஆய்வாளர் உட்பட மூன்று போலீசார் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. மேலும், வைக்கோல்களை வழிப்பகுதியில் போட்டு அதற்கு தீ வைத்தனர். இதுபோன்று காவல்துறையினரை அவர்களது பணியை செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கதிராமங்கலத்தில் போதுமான பாதுகாப்பு போடப்பட்டு, அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது" என்றார்.
மேலும், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக-வினர் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுகுறித்து ஏற்கனவே முதல்வர் விளக்கம் அளித்து விட்டதால் மீண்டும் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அனுமதி மறுத்தார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுகவினர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று, கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், நேற்று அவர் சட்டப்பேரவைக்கு வரவில்லை.
ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாகவே கண்களில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கண்ணில் புரை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சபாநாயகர் தனபால் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிகிச்சை பெற்றுவரும் சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.