சபாநாயகர் ஜனநாயகப் படுகொலைக்கு துணைபோவதால் தான் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: தற்போது ஆட்சியில் இருக்கக் கூடிய முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக என அனைவருமே தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். டெங்குவினால் பாதிக்கப்பட்டு இன்று பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அவற்றிற்கெல்லாம் இந்த அரசு கவலைபட்டதாக தெரியவில்லை.
டெங்கு உயிரிழப்புகள் குறித்து தவறான தகவல் வெளியிடப்படுகிறதாக கூறப்படுகிறதே?
குட்கா புகழ் விஜயபாஸ்கரிடம் சென்று தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒருகோடி பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு அலுவலகங்களில் 3 லட்சம் வேலை வாய்ப்பு இருந்தும் நிரப்பப்படவில்லை என்பதற்கான காரணம்?
தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி எதனைபற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் எப்படி குதிரை பேரத்தின் மூலம் எம்.எல்.ஏ-க்களை இழுத்து, ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில்தான் அவர்கள் அக்கறை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மக்களை பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைபடவில்லை.
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைகளை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். அப்படி அவர்கள் போராட்டாத்தில் இறங்கினால், மக்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லா விவகராத்திற்கும் சட்டமன்றத்தை திமுக நாடுகிறதே?
சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆளுநரை சந்தித்து பலமுறை இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தோம். ஆளுநருக்கு மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவின்படி செயல்படுகிறார். மத்திய பாஜக அரசின் முடிவின் படியே ஆளுநர் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளார். இதன் காரணமாகவே நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், திமுக-வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடிய வகையில், குட்கா விவகாரத்தை கையில் எடுத்தனர். அதற்கு நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அதேபோல, தற்போது டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பதவியை பறித்தனர். அவர்களும் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை எனகூறி வாக்கெடுப்பு நடத்தும்போது எதிர்த்து வாக்களித்த ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சபாநாயகர் எத்தகைய ஜனநாயகப் படுகொலை, அநியாயத்திற்கு துணை நிர்கிறார் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம் என்று கூறினார்.