தென்காசி மாவட்டத்தில் மண்பாண்டங்கள் செய்வதில் பிரபலமாகத் திகழும் காருகுறிச்சி மண்பாண்ட கூட்டுறவுச் சங்கத்திற்கு, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக சென்றிருந்தோம். கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் கிருஷ்ணன் நம்மை வரவேற்றார். தொடர்ந்து அங்கே செய்யப்படும் மண்பாண்டங்கள் குறித்து நமக்கு விளக்கினார். “ நான் காருகுறிச்சி கிருஷ்ணன். என்னுடைய பரம்பரை தொழிலே மண்பானை செய்வதுதான். காருகுறிச்சி மண்பாண்டங்களுக்கு தனிச் சிறப்பு இருக்கிறது. சமீபமாக நாங்கள் செய்த மண்பானை ஃபிரிட்ஜை ( fridge) அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். உங்கள் வீட்டில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டிபோல், பால் பொருட்கள், காய்கறி, மாவு பாக்கெட் என்று எல்லாவற்றையும் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள இந்த மண்பானை ஃபிரிட்ஜ் உதவும். இந்தியாவிலேயே முதல்முறையாக இதை நாங்கள்தான் செய்திருக்கிறோம்.
குறிப்பாக இதற்கு மின்சாரம் தேவையில்லை. இதற்கு வெறும் தண்ணீர் போதும். சுத்தமான களி மண்ணில் இதை செய்கிறோம் . இதுமட்டுமல்லாது தயிர் பானைகள், மண் கரண்டி, உண்டியல், சராமிக் பொம்மைகள், விதை பிள்ளையார், விளக்குகள், வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள், பூந்தொட்டி, பொங்கல் பானைகள் என்று 200 வகையான பொருட்களை நாங்கள் செய்து வருகிறோம். இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் காருகுறிச்சி மண்பாண்டங்களை விரும்பி வாங்குகின்றனர்” என்று கூறினார்.
மிகுந்த ஆர்வத்தோடு பேசிய கிருஷ்ணன் சற்று மெளனமாகி இந்த தொழிலின் சமீபகால சிக்கலை மனம் விட்டு பகிரத் தொடங்கினார். “ இந்த கூட்டுறவு சங்கம் தொடங்கியபோது 300 குடும்பங்கள் வேலை செய்தது. ஆனால் இப்போது அது 100 குடும்பங்களாக குறைந்திருக்கிறது. ஒரு குழந்தைக்கு எப்படி தாய் பால் முக்கியமோ, அதுபோல்தான் மண்பாண்டங்களுக்கு சுத்தமான களி மண் முக்கியம். பத்திரிக்கை மற்றும் அரசு அறிவிப்புகளில் மண் இலவசமாக தரப்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு யூனிட் மண் எங்களை வந்து சேர ரூ. 2000 செலவாகிறது. லாரி வாடகையை நாங்கள்தான் செலுத்த வேண்டியிருக்கிறது. பல உதவிகளை செய்யும் தமிழக அரசு, ஒரு குடும்பத்திற்கு 80 யூனிட் மண்-ஐ இலவசமாக வழங்க வேண்டும்.
மேலும் மின்சாரம் தடைபட்டால் எங்கள் தொழில் பாதிக்கப்படும். மின்சாரத்தில் சுற்றும் சக்கரத்தில்தான் நாங்கள் இப்போது மண்பாண்டங்களை செய்துவருகிறோம். இதனால் தடையில்லா மின்சாரமும் முக்கிய தேவையாக இருக்கிறது” என்கிறார்.
மண்பாண்டங்கள் செய்வது சுலபமான விஷயமா? என்று கேட்டபோது “ பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு பெண் தொழிலாளி கிட்டதட்ட 10 மணி நேரம் தொடர்ந்து உழைக்க வேண்டும். ஒரு ஆண் கூடுதலாக 15 மணி நேரம் உழைக்க வேண்டும். இந்த தொழிலை கற்கும் ஒருவர் எடுத்த உடனேயே மண்பானை செய்ய முடியாது. கிட்டதட்ட 5 வருடங்கள், அவர் பூந்தொட்டிதான் செய்து பழகுவார். ஒரு மண்பானையை சரியாக செய்வதற்கு 6 ஆண்டுகள் தொடர் பயிற்சி தேவைப்படும். இதில் சிறிய தவறு கூட பொருட்களை பாழாக்கிவிடும் ” என்கிறார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணன் மண்ணை பதப்படுத்துவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல என்றும் அதில் இருக்கும் பக்குவத்தை நமக்கு எடுத்துச் சொன்னார் “ குளத்திலிருந்து கிடைக்கும் மண்ணை ஒரு இடத்தில் தேக்கி வைத்திருப்போம். அதை வெயிலில் காய வைத்து, பொடியாக அடித்துக்கொள்வோம். இந்த மணலுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துவிடுவோம். 2 மணி நேரம் கழித்து அதை சுற்றி செங்கலை வைத்து பாத்தி கட்டுவோம். அதன் மீது பழைய சேலையை விரித்து சல்லடை செய்து, மணலை சலிப்போம். சலித்த மணலை 3 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். இந்த மணலை நன்றாக மிதித்து ’மைதா மாவு’ போன்ற பதத்திற்கு கொண்டு வந்தவுடன் தான் மண்பாண்டங்கள் செய்வதற்கு மணல் தயாராகும் ” என்றார்.
தமிழக முதல்வருக்கு காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பாக சில கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன் என்று கூறிய கிருஷ்ணன் தொடர்ந்து நம்மிடம் முன்வைத்த கோரிக்கைகள்
”மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். எந்த சிரமங்களும் இல்லாமல் இலவசமாக மண் கிடைக்க வேண்டும். இப்போது நாங்கள் இருக்கும் இடத்தை, விரிவு படுத்த வேண்டும். முன்பு அரசு சார்பாக மண்பாண்டங்கள் தொடர்பான பயிற்சி நடைபெற்று வந்த கட்டிடம் கிட்டதட்ட 13 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. அதை எங்களுக்கு வழங்கினால் கூடுதலாக 100 குடும்பங்கள் அங்கே வேலை செய்ய முடியும்.
தற்போது நாங்கள் வேலை செய்து வரும் கட்டிடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைதான் இருக்கிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. இதை கான்கிரீட் கூரையாக மாற்றித் தர வேண்டும். மழை காலத்தில், கிட்டதட்ட 3 மாதங்கள் எந்த வேலையும் இருக்காது. இந்த காலங்களில் அரசு தற்போது ரூ. 5000 ஒரு குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குகிறது. அதை ரூ.10,000 ஆக அதிகரித்து கொடுக்க வேண்டும். மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை ஒரு குடும்பம் தொடங்க ரூ. 2 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதை அரசு மானியமாக வழங்கினால், அதிகமானோர் இத்தொழிலை செய்ய முன்வருவார்கள்.” என்றார்.
இத்தொழிலை அழியாமல் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது “ இது ஒரு அனுபவம் சார்ந்த தொழில். அரசு சார்பாக மண்பாண்டங்கள் செய்ய பயிற்சி வழங்க வேண்டும். இதன் மூலம் அடுத்த தலைமுறை இந்த தொழிலை கற்றுக்கொள்வார்கள்” என்றார்.
கிருஷ்ணனின் 17 வயது மகன் முருகேஷ் இத்தொழிலை செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரிடம் பேசியபோது “ நான் ஐ.டி.ஐ படித்திருக்கிறேன். அப்பாவுக்கு உதவியாக, இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். எனக்குள்ளேயே மண்பாண்டங்கள் செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் படித்த படிப்புக்கு வேலை கிடைத்தால், அதைதான் தேர்வு செய்வேன். அதற்காக இத்தொழிலை விட மாட்டேன். இதையும் சேர்த்து செய்வேன்” என்கிறார்.
மண்பானைகளுக்கு சாயம் பூசுவது, மண்ணை பக்குவப்படுத்துவது, பானை தட்டுவது, மண் சட்டிகளை தட்டுவது போன்ற வேலைகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர். மண் பானை செய்வது, பூந்தொட்டி செய்வது மற்ற மண்பாண்டங்களை செய்யும் வேலையில் ஆண்கள் ஈடுபடுகின்றனர். ஒரு குடும்பத்தில் இருவரும் இத்தொழிலை சேர்ந்து செய்தால்தான் மாதம் ரூ.7000 வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். குயவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் இத்தொழிலில் பெரும்பான்மையாக ஈடுபடுகின்றனர்.
” கனிமொழி அம்மா இங்கே வந்திருந்தாங்க. நாங்க ஆட்சிக்கு வந்தா கண்டிப்பா உங்க கோரிக்கைய நிறைவேற்றுவோம்னு சொன்னாங்க. எங்களுக்கு நம்பிக்கை இருக்கு முதல்வர் அய்யா நிச்சயம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவாரு” என்று நம்மிடம் நம்பிக்கையுடன் கூறி வழி அனுப்பி வைத்தார் கிருஷ்ணன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.