நீட், விவசாயிகள் பிரச்னை, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக வழக்கமாக தெரிவிக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முதன்முறையாக தமிழக அரசியல் குறித்து பிரதமரிடம் பேசினேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிகார மோதல் காரணமாக அதிமுக பிளவு கண்டுள்ளது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்தவர்கள், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் சேர்த்து மூன்று அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, பன்னீர்செல்வம் தலைமையிலும், அதிமுக அம்மா அணி, சசிகலா தலைமையிலும் செயல்பட்டு வந்தது. சசிகலா சிறை சென்றதும் தினகரன் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக அம்மா அணி, தினகரன் சிறை சென்றதும் முதல்வர் பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தினகரனை புறக்கணித்து விட்டு இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முயற்சிகள் டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்தனர். பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் விவகாரம் குறித்து பேசியதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் இல்லத்தில் அவரை சந்தித்த பன்னீர்செல்வம், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மோடியிடம் எடுத்துக் கூறினேன். தமிழக அரசியல் நிலைப்பாடு, நிலவும் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறினேன் என்றார். அணிகள் இணைப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் சூழல் குறித்து பேசினாலே அதற்குள் எல்லாம் அடங்கி விடும் என்றார். மேலும், தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவை உறுதியாக எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
வழக்கமாக நீட் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தெரிவிக்கும், பன்னீர்செல்வம், இந்த முறை தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதாக கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.