தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ஜூலை மாதத்தில் இவ்வாறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மாதத்தில் இவ்வாறு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது ஐந்தாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை தடுத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் அமலா சேவியர் தகவல் தெரிவித்தார்.

ஜூலை மாதத்தில் இவ்வாறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் நெடுந்தீவில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதேபோல், ஜூலை 13-ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடரும் நிலையில், இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியாத வகையில் வேண்டுமென்றே தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்கிறது”, என தெரிவித்திருந்தார்.

×Close
×Close