இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கலான புதிய மசோதாவை ஏற்க முடியாது என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மீன்வளத்துறையின் அனுமதி பெறாமல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் நடத்தும் இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு மதிப்புப்படி ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேபோல், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கட்டுபடுத்தும் வகையில், ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா ஒன்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் கடும் பாதிப்பு ஏற்படும் என மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மசோதா குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தால் 2 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் என்ற புதிய மசோதாவை ஏற்க முடியாது. இலங்கையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இந்திய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய மசோதா, மீனவர் பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர், இலங்கையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு இந்தியா சார்பில் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.