ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி வாக்களிப்பாரா? என்கிற கேள்விக்கு, ‘சஸ்பென்ஸ்’ஸையே பதிலாக கொடுத்தார் ஸ்டாலின்.
ஜூலை 17-ம் தேதி இந்திய ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கு தி.மு.க. ஆதரவு வழங்கியிருக்கிறது.
பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டாலும், மீராகுமாருக்கு அதிகபட்ச வாக்குகளை பெற்றுக் கொடுக்க எதிர்கட்சிகள் தீவிரமாக பணியாற்றுகின்றன. தமிழகத்தில் 89 எம்.எல்.ஏ.க்களையும், 3 எம்.பி.க்களையும் வைத்திருக்கும் தி.மு.க.வின் ஆதரவு மீராகுமாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சென்னைக்கு நேரில் வந்து உடல்நலம் குன்றியிருக்கும் கருணாநிதியையும் சந்தித்து சென்றார் மீராகுமார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 17) காலையில் தலைமைச் செயலகம் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இருக்கிறார்கள். அப்போது திருவாரூர் எம்.எல்.ஏ. பொறுப்பிலுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வாக்களிக்க செல்வாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
அண்மைகாலமாக சற்றே உடல்நிலை தேறி, குறிப்பிட்ட பார்வையாளர்களை சந்திக்கும் அளவுக்கு முன்னேறியுள்ள கருணாநிதியை வாக்களிக்க அழைத்துச் செல்ல வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து இன்று மதியம் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு ஸ்டாலின், ‘நாளை காலை வரை பொறுத்திருங்கள். அப்போது உங்களுக்கு தெரியும்!’ என சஸ்பென்ஸ் வைத்தார். தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஸ்டாலினிடம் கேட்டபோது, ‘சட்டமன்றத்தில் இது குறித்து ஏற்கனவே நான் பேசியிருக்கிறேன். நடவடிக்கை எடுத்திருந்தால் நல்லதுதான்’ என்றார்.