ஜல்லிக்கட்டு வெற்றியைப்போல ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு எதிராக வெற்றி காண வேண்டும்: முக ஸ்டாலின்

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் போடாதது ஏன்?

ஹிந்தி ஆதிக்கம் செலுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், தமிழ் தரம் தாழ்த்தும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது என திமுக செயல் தலைவர்  முக ஸ்டாலின் தெரிவித்தார்.
 
வேலூரில் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வை கண்டித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கிய திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் தாய் மொழியான தமிழுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. ஹிந்தி ஆதிக்கம் செலுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழ் தரம் தாழ்த்தும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவேதான் தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதை எரிர்க்கிறோம். ஆனால், ஹிந்தி மொழியை விருப்பிப் படிப்பவர்களை எதிர்க்கவில்லை.
 
முன்னதாக மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஹிந்தியை திணித்து ஆதிக்கம் செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும்  மாற்ற மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. 1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு காரணமே, 1965-ம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தான்.
 
தற்போது நீட் தேர்வானது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றபோதிலும், ஆட்சி செய்பவர்களுக்கு அது குறித்து எந்தவித கவலையும் இல்லை. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் போடாதது ஏன்? முன்னதாக தில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து வலியுறுத்தவில்லை.
மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது என்றும், மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்பது தான் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வருகிறன்றன.
 
இதற்கு காரணம் என்னவென்றால் ஊழல், வருமானவரித்துறை பிடியில் சிக்கியுள்ளதே.
ஜல்லிக்கட்டுக்கு ஒருங்கிணைந்து வெற்றி கண்டதைப் போல, ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், நீட் தேர்விற்கு எதிராகவும் அரசியலை கடந்து வெற்றி காண வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.
 

×Close
×Close