இதையடுத்து, “சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் எச்சரித்தும், ‘எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு’ என்ற பதாகைகளை ஏந்தி, திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
இதனால், ஸ்டாலின் உட்பட திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்கள் குண்டுக்கட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் ஸ்டாலின், துரைமுருகன் உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஸ்டாலின் அளித்த பேட்டியில், “இன்று காலை மீண்டும் நாங்கள் சட்டமன்றத்துக்குச் சென்று, மீண்டும் இந்தப் பிரச்சினையை எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிச்சயம் குரல் கொடுக்கப் போகிறோம்” என தெரிவித்தார்.
அதன்படி, இன்று மீண்டும் எம்.எல்.ஏ. சரவணனின் வீடியோ பேரம் குறித்த விவாதத்தை எழுப்பினார் ஸ்டாலின். ஆனால், இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.