ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் அதிமுகவினருக்கு உள்ளது: ஸ்டாலின் பேட்டி

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தாமல் சட்டசபையை ஒத்திவைத்தது தொடர்பாகவும், கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது தொடர்பாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கி, 24ம் தேதியுடன் முடிந்தது. ஆர்கேநகர் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மானிய கோரிக்கை மீதான விவாதத்துகாக சட்டமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றம் முடித்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது ஜனநாயக படுகொலை என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 89 பேரையும் சென்னை வருமாறு திமுக தலைமைக் கழகம் அழைத்தது. இதையடுத்து 87 எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் இருவரும் வரவில்லை. இது குறித்துக் கேட்ட போது, அவர்கள் மாவட்டத்தில் நீட் தேர்வு கருத்தரங்கு நடைபெறுவதால், அவர்களுக்கு மட்டும் கட்சி தலைமை விதிவிலக்கு அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்துக்கு காலை பத்து மணி முதல் வர ஆரம்பித்தனர். காலை 11 மணிக்கு ஸ்டாலின் வந்ததும் கூட்டம் ஆரம்பித்தது.

கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தாமல் சட்டசபையை ஒத்திவைத்தது தொடர்பாகவும், கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டம் முடிந்ததும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தலைமை செயலகம், அல்லது கவர்னரை சந்திக்க செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் அதிமுகவினருக்கு ஏற்பட்டு இருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதை தெரிவித்தார். மேலும் கருணாநிதியின் பெருமைகள் பேரவையில் பதிவாகிவிட கூடாது என்று நயவஞ்சகத்தோடு அதிமுக செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பேரவையை கூட்டுமாறு ஆளுநருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

×Close
×Close