டெல்லி ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலையாட்டி பொம்மை அரசாக மாநில மாறியதின் விளைவே அனிதா என்ற கிராமப்புற ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனதற்கு காரணம் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இன்று நடைபெறும் அதிகாரப்பசிமிக்க அரசாங்கத்தால் நமது மாநில நலன்கள் பலி கொடுக்கப்பட்டு நீதி நிலைநாட்ட படாமல் சுயாட்சி உரிமையை இழக்க தொடங்கியதின் வெளிப்பாடே இன்றைய மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம்.
டெல்லி ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலையாட்டி பொம்மை அரசாக மாறியதின் விளைவே அனிதா என்ற கிராமப்புற ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்துபோனதற்கு காரணம். அதனாலேயே அந்த மாணவி அத்தகைய துயர முடிவைத் தழுவினாள். இந்த துயர மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே முழுப்பொறுப்பு.
நான் நமது பேரவையின் தொண்டர்களை கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால் இந்த சம்பவத்தை அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக்குரல் எழுப்புவதோடு மட்டுமல்லாமல் ஏழை கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீட் தேர்வை ரத்துசெய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். அது மட்டுமே மாணவி அனிதாவின் துயரமான முடிவிற்கு நீதி கிடைத்திட ஒரு வாய்ப்பாக அமையும். குறிப்பாக நமது பேரவையின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர்கள் மாணவி அனிதாவின் துயர மரணத்திற்கு நீதிகேட்டு போராட முன்வர வேண்டுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.