”அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரிழப்பு”, என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்ட மாணவி அனிதா, வெள்ளிக்கிழமை தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததால், பிளஸ் டூ தேர்வில் 196.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருந்தும் மாணவி அனிதாவால் மருத்துவ படிப்பில் இடம் பெற முடியவில்லை. இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் குறிப்பிடத்தக்கது. தன்னால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லையே என்ற மன வேதனையில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “மாணவி அனிதாவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணம், குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் ஏழை பெற்றோரின் மனம் நிம்மதி அடைய வேண்டும். அனிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். இத்தகைய துயர முடிவுகளை குழந்தைகள் எடுக்கக் கூடாது”, என தெரிவித்தார்.
மேலும், “அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் குழந்தைகளுக்கு உற்சாகம் மற்றும் மன உறுதியை அளிக்கும் வகையில் பேச வேண்டும். எக்காரணம் கொண்டும் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் பேச கூடாது.”, என கூறினார்.
மாணவி அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை தான் சந்திக்க உள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நல்ல புத்திசாலியான ஏழை குழந்தை 1,176 மதிப்பெண்கள் எடுத்தது சாதாரணமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீட் தேர்வு மற்றும் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதுகுறித்து இன்னொரு நாள் பேசலாம் என கூறி சென்றார்.