அரசியல் லாபங்களுக்காக மூளைச் சலவை செய்து மாணவி அனிதாவை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறார்கள் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை, தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தை வேகப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக.வும், மாநிலத்தை ஆளும் அதிமுக.வும்கூட வெளிப்படையாக இந்தப் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை.
ஆனால் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நீட் எதிர்ப்புப் போராட்டம் குறித்தும் அனிதா மரணம் குறித்தும் அதிரடியான கருத்துகளை கூறி வருகிறார். ‘அரசியல் லாபங்களுக்காக யாரோ அழுத்தம் கொடுத்து அனிதாவை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறார்கள். குறிப்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோருக்கு இதில் உள்ள பங்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என பேட்டி கொடுத்தார் கிருஷ்ணசாமி.
சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யக்கோரி, சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். இதன் அடுத்தகட்டமாக நேற்று (செப். 6) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து, மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு கொடுத்தார் கிருஷ்ணசாமி.
இது குறித்து இன்று காலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், ‘அரசியல் லாபங்களுக்காக சிலர் மூளைச் சலவை செய்து அனிதாவை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறார்கள். இது தொடர்பாக என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டால், அந்த ஆதாரங்களை தாக்கல் செய்வேன்.
நீட் எதிர்ப்பு போராட்டத்தை அரசியல் காரணங்களுக்காக சிலர் நடத்துகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். எனது மகளுக்கு மெடிக்கல் சீட் பெற்றது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். அதற்கு சிபிஐ விசாரணை வைத்தாலும் எதிர்கொள்ளத் தயார்!’ என்றார் கிருஷ்ணசாமி.
நீட் விவகாரத்திலும், மாணவி அனிதா மரணம் தொடர்பாகவும் கிருஷ்ணசாமி வெளிப்படுத்தி வரும் கருத்துகள் தமிழகத்தில் இடதுசாரிகள், திமுக, சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.