நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3-வது மாடியில் “பார்க்கிங்” செய்யப்பட்டிருந்த காரை இயக்க முயன்ற மாணவி, காருடன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ரெய்லி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்-தவமணி தம்பதியினர். முருகேசன் குன்னூர் அரசு மருத்துவமனை அருகே கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர்களுடைய மகள் யமுனா(18) குன்னூரில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
யமுனா தனது தந்தையின் காரை கடந்த சில நாட்களாக எடுத்து கார் ஓட்ட பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது வீட்டின் 3–வது மாடியில் உள்ள ‘பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க யமுனா முயற்சித்துள்ளதாகவும், அப்போது கார் பின்நோக்கி நகர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர யமுனா முயற்சி செய்தபோதும், கார் கட்டுப்பாட்டை இழந்து 3–வது மாடியில் தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்துவிட்டதாம். கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையில் விழுந்ததால், யமுனா இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டார்.கார் விழுந்த சத்தத்தைக் கேட்டு, யுமுனாவின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அப்பகுதிக்கு ஓடி வந்து பார்த்தனர்.
யமுனா காரினுள் சிக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், யமுனாவை மீட்க முயன்றனர். தொடர்ந்து, காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்த அவர்கள், யமுனாவை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே யமுனை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.