”அனிதாவின் மரணத்தால் நாடு நல்ல மகளை இழந்து விட்டது”, என திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. அனிதாவின் தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கிறார். அனிதா பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தார். 196.5 கட்- ஆஃப் கொண்டிருந்த அனிதா, மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வெழுதினார். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் எடுத்தார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தினால், தம்மைப்போன்ற கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாது என தொடர்ந்து போராடியவர் அனிதா.
தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், மாணவி அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால், கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி அனிதாவின் உடலுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்டியன், “அனிதாவின் மரணத்தால் நாம் சமூக நீதியை இழந்துவிட்டோம். இந்த நாடு நல்ல மகளை இழந்துவிட்டது. குழுமூர் கிராமம் நல்ல மருத்துவரை இழந்துவிட்டது. மாணவி எடுத்த மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை என சொல்லும் மத்திய அரசும், அதற்கு துணை போன மாநில அரசும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு தாளமுத்து நடராசன் எப்படி தூண்டுகோலாக இருந்தாரோ, அதுபோல் மாணவி அனிதாவின் மரணமும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு தூண்டுகோலாக உள்ளது. அணிதாவின் இறுதிஒ ஊர்வலத்தின்போது, தமிழக முழுவதிலும் மாணவர்கள் அமைதி ஊர்வலத்தை நடத்த வேண்டும்”, என கூறினார்.
மேலும், “மாநில பட்டியலில் இருந்த கல்வி நெருக்கடி கால கட்டத்திக் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும், அதுவே ஜன நாயகம்.”, எனவும் கூறினார்.
”இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 24 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கல்லூரிகளில் நம் பிள்ளைகளுக்கு இடமில்லை என்பது சமூக அநீதி. நீட் தேர்வுக்கு எதிரான பெரும் போராட்டத்தை அனிதா துவங்கி வைத்திருக்கிறார்.”, இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.